Last Updated : 30 Nov, 2015 06:11 PM

 

Published : 30 Nov 2015 06:11 PM
Last Updated : 30 Nov 2015 06:11 PM

பருவநிலை மாற்றம்: இனியும் விழிக்காவிட்டால் விளைந்திடும் 15 பேராபத்துகள்!

புவி வெப்பமடைதலின் கோர விளைவுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக சீரிய அறிவியல் ஆய்வுத் தகவல்களுடன் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பருவநிலை மாற்ற ஐ.நா. மாநாடுகளில் புவி வெப்பமடைதல், கரியமிலவாயு வெளியேற்றம் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அத்துடன், மேலும் உற்பத்தி நடவடிக்கைகள் பெருகவே செய்துள்ளன என்பதை உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் கவலையுடன் எதிர்நோக்குகின்றனர்.

சரி, நாடுகள் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? கடலோர நகரங்கள் கடல்நீரில் அமிழ்வதும், உலகின் பெரும் பகுதிகள் வெப்ப அலைகளினால் தாக்குண்டு வறட்சி நிலையும், இதனால் பெருமளவு அகதிகள் பெருகுவதுமாக நாடுகள் பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்கத் தயாராக வேண்டும்.

ஒன்று புவிவெப்பமடைதல் நிகழ்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையெனில் அதன் தீவிர விளைவுகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அத்தகைய இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கும் ஏழை நாடுகளிடம் அதற்கான பொருளாதார வலுவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், பாரீஸில் 195 நாட்டுத் தலைவர்கள் பருவநிலை மாற்ற ஐ.நா. உச்சி மாநாட்டுக்காகக் கூடியுள்ளனர். இந்த மாநாடும் இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தகுந்த அதிரடி முடிவுகளை எடுக்க முடியாது போனால், என்ன ஆகும் என்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் 15 அம்ச பட்டியல்:

1. இந்த நூற்றாண்டு முடிவில் பூமியின் வெப்ப அளவு 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதுகுறித்த இமாலய அளவுக்கு விஞ்ஞான ஆய்வுத் தரவுகள் உள்ளன. அவை 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு அதிகரிப்பு பேரழிவில் கொண்டு விடும் என்று எச்சரித்துள்ளன.

2. எது எப்படி போனால் என்ன? நாம் நம் உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகளை கவனிப்போம் என்ற அலட்சிய நோக்கு, மீண்டும் நிலைநிறுத்த முடியாத அளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று நாடுகளுக்கிடையேயான ஐ.நா. பருவநிலை மாற்றக் குழு எச்சரித்துள்ளது.

3. 2100-ம் ஆண்டில் உலக அளவில் கடல்நீர் மட்டம் 26-82 செ.மீ. வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அளவு அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக ஐ.நா. தரவுகளே கூறுகின்றன.

4. கிரீன்லாந்து, அண்டார்டிகா பனிப்படலங்கள், இமாலயம் உள்ளிட்ட மலைகளின் பனிச்சிகரங்கள் ஆகியவை காலியாகிவிடும். இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதோடு வெப்பமடைவதும் நிகழும்.

5. ஐ.நா. நிர்ணயித்த வெப்ப நிலை அதிகரிப்பான மட்டுப்படுத்தப்பட்ட 2 டிகிரி செல்சியஸ் கூட 28 கோடி மக்களின் அழிவுக்குக் காரணமாகிவிடும்.

6. அதிவேக புயல்கள், உறைய வைக்கும் குளிர், தீவிர வெப்ப அலைகள் ஆகியவை வாடிக்கையான நிலைமைகள் ஆகிவிடும்.

7. கடும் வெள்ளங்கள், பனிப்புயல், டைஃபூன் சூறைக்காற்று ஆகிய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

8. மேலும் உலகின் ஒரு பகுதியில் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.

9. சிரியா மற்றும் கலிபோர்னியா வறட்சி நிலைக்கு வானிலை மாற்றமே காரணம் என்பதை விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர்.

10. பருவநிலை மாற்றம் விளைவிக்கும் பெரிய வெள்ளங்களினால் பெரும்பகுதி மக்கள் திரள் தங்கள் இருப்பிடங்களை விட்டு புலம் பெயர வேண்டும்.

11. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, உணவுப்பொருள் தட்டுப்பாடுகள் ஏற்படும்.

12. நீராதாரத்திற்காக போர் மூளும் அபாயமும் உள்ளது.

13. கடல் நீர்மட்ட உயர்வினால் சுந்தரவனக் காடுகள் அழியும் ஆபத்து உள்ளது, இப்பகுதியிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மக்கள் தொகை புலம் பெயரும் நிலை ஏற்படும்.

14. மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கடல் நீர்மட்ட உயர்வால் வானிலை மாற்ற அகதி நாடுகளாக மாறும் நிலை ஏற்படும்.

15. இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியாமல் ஏழை நாடுகள் பொருளாதார தேக்க நிலைக்குத் தள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x