Last Updated : 27 Sep, 2016 02:22 PM

 

Published : 27 Sep 2016 02:22 PM
Last Updated : 27 Sep 2016 02:22 PM

நிலை தடுமாறிய டிரம்ப்; அமைதி காத்த ஹிலாரி- அனல் பறந்த முதல் நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி - டிரம்ப் கலந்து கொண்ட முதல் நேரடி விவாதத்தில் அனல் பறந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹிலாரி - டிரம்ப் பங்கேற்ற நேரடி விவாதம் நியூயார்க் நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைகழகத்தில் திங்கட்கிழமை நடந்தது.

90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. இவ்விவாதத்தில், நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பு, அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம், ஐ.எஸ். எதிர்ப்பு நடவடிக்கை,அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.

பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம்:

அமெரிக்க பொருளாதாரக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்கா வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளியே செல்லாமல் இருக்கும். இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஹிலாரி கிளிண்டன் எல்லா தரப்பு மக்களுக்கான ஒரு பொதுவான பொருளாதாரக் கொள்கையே அவசியம் என்றார்.

பொறுமை இழந்து பேசிய டிரம்ப்:

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி பேசுகையில் அடிக்கடி இடைமறித்து பேசிய டிரம்ப், ஹிலாரி அரசு பதவியில் இருக்கும்போது நாட்டின் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். மேலும் அமெரிக்காவின் அதிபராவதற்கு போதிய திறமை அவரிடம் இல்லை என்றார்.

இதற்கு பதிலளித்த ஹிலாரி, "டிரம்ப் என்னை குற்றஞ் சாட்டுவதற்காகவே இந்த விவாத நிகழ்ச்சிக்கு தயாராகி உள்ளார். நானும் விவாதத்துக்கு தயாராகிதான் வந்திருக்கிறேன். ஓர் அதிபர் வேட்பாளராக, அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன்"என்றார்.



டிரம்ப்பின் திட்டங்கள் தெளிவாக இல்லை:

டிரம்ப்பின் பெரும்பாலான யோசனைகள் இனரீதியாக உள்ளன. அகதிகள் வருவதை தடுப்பதற்கு அமெரிக்கா-மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் திட்டத்தைதான் டிரம்ப் வைத்துள்ளார். அதுதவிர அவரிடம் வேறு யோசனைகள் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிவாத அமைப்புகளை எப்படி எதிர் கொள்வது போன்ற திட்டங்கள் டிரம்ப்பிடம் இல்லை என ஹிலாரி குற்றம் சுமத்தினார்.

வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் மறைத்து வருகிறார்:

டொனால்டு டிரம்ப தனது வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் தொடர்ந்து மறைத்து வருவது ஏன் என ஹிலாரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ஹிலாரி வெளியுறவுச் செயலராக இருந்த போது ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீஸின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்கு ஹிலாரி நீக்கிய தகவலை வெளியிட்டால்,எனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவேன் என்றார்.

இவ்வாறாக ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைக்க 90 நிமிடங்களில் முதல் விவாதம் முடிந்தது.

இதனையடுத்து அடுத்த விவாத நிகழ்ச்சி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x