Last Updated : 03 Oct, 2015 08:44 AM

 

Published : 03 Oct 2015 08:44 AM
Last Updated : 03 Oct 2015 08:44 AM

தொடர் சிக்கல்களில் துருக்கி - 12

சிரியாவுக்கும், துருக்கிக்கும் கூட ஏழாம் பொருத்தம்தான். முதலாம் உலகப்போர் முடிந்த வுடனேயே பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. நவீன துருக்கி யின் ஒரு மாகாணம் ஹடே. ஒப்பந் தப்படி இதை தனக்குரியது என்று கூறிக் கொண்டது துருக்கி. என்றா லும் 1938 வரை பிரான்ஸின் விருப் பப்படி அந்த மாகாணம் சிரியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தப் பகுதிக்கென்றே ஒரு தனி நாடாளுமன்றம் அமைந்தது.

1939-ல் இந்த நாடாளுமன்றம் ஒரு முடிவெடுத்தது. “நம் மாகா ணம் இனி துருக்கியோடு முழு மையாகச் சேர்ந்து விடலாம்’’. ஆனால் இதை சிரியா ஏற்க வில்லை. கசப்புகள் தோன்றத் தொடங்கின.

அடுத்த பிரச்னை நதி நீர் தொடர்பானது. யூஃப்ரடிஸ், அஸி ஆகிய நதிகள் துருக்கி வழியாக சிரியாவுக்குப் பாய்கின்றன. இந்த நதிகளில் அணைகள் எழுப்பியது துருக்கி. இதனால் சிரியாவுக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்து இரண்டு நாடுகளுக்கும் மீண்டும் மோதல்.

எல்லாவற்றுக்கும் சிகரமான கசப்பை உருவாக்கியது சிரியா வின் அதிபர் பஷார் அல் அஸாத் என்பவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். இதை அவரது தந்தையின் நடவடிக்கைகள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும். PKK என்ற கட்சிக்கு அவர் இயங்க இடம் கொடுத்தார்.

அதென்ன PKK? குர்துகளின் உழைப்பாளர் கட்சி என்பதன் சுருக்கம் இது. துருக்கிக்கும், குர்துகளுக்கும் உள்ள பிரச் னையை ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

1980-களிலும், 1990-களிலும் துருக்கி அரசும், குர்துகளும் மோதிக் கொண்டபோது குர்து களை தன் பகுதியில் இயங்க அடித்தளம் அமைத்துக் கொடுத் தது சிரியா.

டமாஸ்கஸ் மீது தனது ராணுவம் படையெடுக்கும் என்று அறிவித்தது துருக்கி. (டமாஸ்கஸ் சிரியாவின் தலைநகர்). இதைத் தொடர்ந்து குர்து தலைவருக்கு தாங்கள் அளித்திருந்த அடைக்கலத்தை நீக்கிக் கொண்டது சிரியா. பின்னர் இருநாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு பல சர்வதேச விஷயங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து `நண்பேன்டா’ என்று காட்டிக் கொண்டன.

ஆனால் ஒரு காலகட்டத்தில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. சிரியா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் அதிக மானது. அந்தச் சமயத்தில் புரட்சி யாளர்களை ஆதரித்தது துருக்கி. அதாவது மறைமுகமாக சிரியாவை ஆண்ட பஷார் அல் அஸாத் பதவி நீக்கம் செய்யப்படுவதை ஆதரித் தது. புரட்சியாளர்கள் துருக்கியில் இணைந்து செயல்பட அனுமதித் தது. புரட்சியாளர்களுக்கு தன் எல்லையை தாராளமாகத் திறந்து விட்டது.

இதில் வேறொரு எதிர்பாராத சிக்கல் முளைத்தது தனிக்கதை. ஆயிரக்கணக்கான அகதிகள் (சிரியாவில் நிலவும் உள்நாட்டுப் போரின் விளைவுகளுக்குப் பயந்து கொண்டு) துருக்கிக்குள் நுழைந்தனர்.

துருக்கிகளுக்கும், குர்துகள் கட்சிக்குமிடையே ஒரு வழியாக அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. ஆனால் அதுவும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சிதிலமடைந்தது.

துருக்கி அரசின் ஜெட் விமானங் கள் இராக் பகுதியில் அமைந்த குர்துகளின் இருப்பிடங்களை குறிவைத்துத் தாக்கின.

துருக்கியில் குர்துகளின் இடது சாரிக் கட்சி ஒன்றும் இயங்குகிறது. மக்கள் ஜனநாயக கட்சி எனப் படும் அது HDP என்று அழைக்கப் படுகிறது.

எந்தெந்த இடங்களில் ஜூன் மாதத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு அதிகம்பேர் வாக்களித்தார்களோ அந்தந்தப் பகுதிகளில்தான் அரசு தன் தாக்குதலைக் கூர்மையாக்கி இருக்கிறது.

கணிசமான இடங்களை HDP வென்றதால் ஆளும் கட்சி முழுமை யான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் தாக்குதல்கள் என்கிறார்கள் குர்துகள்.

1984-ல் தனி நாடு வேண்டு மென்று கேட்கத் தொடங்கியதி லிருந்து அரசுக்கும், குர்துகளுக் கும் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் இறந் திருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு இதில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பும் தன் பங்கை ஆற்றத் தொடங்கியி ருக்கிறது.

ஆக ஒருபுறம் குர்துகள், மறு புறம் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆகிய இருதரப்பையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் துருக்கிக்கு.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x