Published : 01 Aug 2014 01:06 PM
Last Updated : 01 Aug 2014 01:06 PM

தைவானில் எரிவாயு கசிந்து பயங்கர விபத்து: 24 பேர் உயிரிழப்பு; 270 பேர் படுகாயம்

தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் கசிவுக் காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 24 பேர் பலியாகினர். மேலும் 270-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைவானில் உள்ள கவோசியுங் நகரத்தில் நேற்று இரவு நிலத்தடி எரிவாயு குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5 வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து இந்த விபத்தில் 24 பேர் பலியானதாக தெரிகிறது. 270-க்கும் மேற்பட்டோர் மோசமான காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர்.

மக்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், விபத்தில் சிக்கியவர்கள் தப்பிக்க வழியில்லாமல் தவித்துள்ளனர்.

தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தாக நகரமே தீயால் பரவியது. இதனால் நகர மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த விபத்து, தைவானில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்திராத மோசமான விபத்தாக கருதப்படுகிறது.

எரிவாயு குழாய் மூலம், தீ அதிவேகத்தில் பரவி சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் தீ பற்றி எரிய ஆரம்பித்தன. சாலைகள், வீடுகள் அனைத்து வெடித்து சிதறின. பல மீட்டர் உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்ததை அடுத்து, நகரின் சுற்றுவட்டாரத்தில் 3 கி.மீ தூரத்திற்கு தீயின் தாக்கம் பரவியது.

நிலைமையை கட்டுப்படுத்து, நகரம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதில் சிலர் பணியின்போது தீயில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியும், பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியும் காண்போர் மனதை மிக பெரிய அளவில் பாதித்துள்ளது.

இந்த விபத்து மிக மோசமானதாவும், பயங்கர நிலநடுக்கத்தை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக உள்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கவோசியுங் எங்கும் தொடர் வெடிவிபத்து காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன, சாலைகளில் மிக பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் பல முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x