Published : 22 May 2017 11:36 AM
Last Updated : 22 May 2017 11:36 AM

தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவூதியில் பேச்சு

தீவிரவாதத்தால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரேப் – இஸ்லாம் – அமெரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.

50 இஸ்லாமிய நாடுகள் பங்கு பெறும் இந்த மாநாடு தான், அமெரிக்க அதிபராக ட்ரம்ப பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் வெளிநாட்டில் நடக்கும் முதல் மாநாடாகும்.

இந்தப் பேச்சின் போது அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதல், பாஸ்டன் வெடிகுண்டு தாக்குதல், ஆர்லாண்டோ தாக்குதல் ஆகியவற்றை நினைவு கூர்ந்து பேசிய ட்ரம்ப் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர் என்று குறிப்பிட்ட ட்ரம்ப் அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.

ஆசிய நாடுகளில் இந்தியா போன்ற நாடுகளே தீவிரவாத த்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று ட்ரம்ப் தனது பேச்சின் போது தெரிவித்தார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு இந்தியா குறித்து அதிகம் கருத்து தெரிவிக்காத ட்ரம்ப் முதல் முறையாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் தனது முதல் பயணத்தை இஸ்லாமிய நாடுகளில் மேற்கொள்ளும் டிர்ம்ப்பின் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x