Last Updated : 31 Oct, 2014 10:15 AM

 

Published : 31 Oct 2014 10:15 AM
Last Updated : 31 Oct 2014 10:15 AM

சீர்குலையும் சிரியா - 3

‘நாட்டை ஆண்ட இந்திரா காந்திக்கு இரண்டு மகன்கள். மகன்களில் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். அரசியல் செயல் பாடுகளில் தடாலடியாக ஈடுபட்டார். பாராட்டுகள், விமர்சனங்கள் ஆகிய இரண்டும் எழுந்தன. அடுத்ததாக அவர்தான் ஆட்சி நாற்காலியில் அமருவார் இப்படித் தான் பலரும் யூகித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் விபத்தொன்றில் இறந்தார் அவர்.

இந்த நிலையில் அவரது சகோதரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நிலை உண்டானது. தான் அரசியலுக்கு வருவோம் என்பதை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மேலை நாட்டில் கல்வி கற்ற இளைஞர் அவர். அவர் மனைவியும் வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிறிஸ்தவர்.’’.

எதற்காக இந்திரா காந்தி- சஞ்சய் காந்தி - ராஜீவ் காந்தி சோனியா காந்தி கதையை இங்கே கொண்டுவர வேண்டுமென்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். மேலே குறிப்பிட்டது சிரியாவின் ஆட்சியில் அமர்ந்தவர்கள் குறித்த விவரங்கள்தான்! இந்திரா காந்தி என்ற இரு வார்த்தைகளை மட்டுமே மாற்ற வேண்டும், அவ்வளவுதான்.

சுமார் 30 வருடங்கள் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் அஸாத். எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது என்று வெளிப்படையாகவே 1990ல் அறிவித்தார். அவ்வப்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலும் மக்களின் பெரும் ஆதரவு பெற்றவராகத்தான் இவர் விளங்கினார். 1991 தேர்தலில் 99.98 சதவிகித வாக்களித்து இவரை நான்காம் முறையாக நாட்டுத் தலைவராக்கினார்கள் சிரியா மக்கள்.

இவரது இரண்டு மகன்களில் ஒருவனான பஸ்ஸெல் அல் அஸத் என்பவர்தான் அந்த நாட்டின் அடுத்த அதிபர் என்று மக்கள் நினைத்திருக்க, கார் விபத்தொன்றில் அவர் பிராணனை விட்டார்.

மற்றொரு மகன் பஷர் அல் அஸாத் அதிபரானார். பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்கு பாலைவனத்தில் போட்ட மீனாகத் துடித்தார். காரணம் அவரது கனவு அரசியல் அல்ல. லண்டனில் கண் மருத்துவர் படிப்பை முடித்துவிட்டு டமாஸ்கஸுக்கு வந்து தன் தாய் நாட்டு ராணுவத்தில் கண் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த அவருக்குதான் மணிமுடி.

இன்று பல உலக நாடுகளின் கண்டனத்துக்கும், ஐ.எஸ்.ஸின் நேரடித் தாக்குதலுக்கும் அவர் மையப் புள்ளி. கல்வியாளர் என்பதாலோ என்னவோ ராணுவத்திலும் ஒரு நவீனப் பிரிவை ஏற்படுத்தினார். இதன் பெயர் ‘சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி’.

இவர்களின் ஆயுதம் துப்பாக்கி அல்ல, கணினி. அரபு உலகத் தில் இப்படியொரு படை செயல் படுவது இதுவே முதல் முறை. எதிரிகளின்மீது வலைத்தளப் பக்கங்களின் மூலம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது சிரியா அரசு. (ஸைபர் அட்டாக்).

இவர் மீது ஐ.எஸ். தனி கவனம் எடுத்து தாக்கத் தொடங்கி இருப்பதற்கு வேறொரு முக்கிய காரணமும் உண்டு. பிறப்பால் இவர் ஷியா இனத்தைச் சேர்ந்தவர். ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு தேசத்தை முஸ்லிம் ஒருவர் தலைமையேற்று ஆட்சி செய்கிறார்’. இப்படி நினைத் திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் ‘முக்கால்வாசி மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் ஒரு தேசத்தை ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார்’. இப்படி நினைத்ததால் அங்கு ஓர் உலக மகா கலவரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அதிபர் பஷாரின் மனைவி அஸ்மா. அழகானவர். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். பிரிட் டனைச் சேர்ந்தவர். ‘பாலைவன ரோஜா’ என்று உள்ளூர் ஊடகங் களால் வர்ணிக்கப்பட்டவர்.

தற்போதைய சிரிய கலவரம் குறித்து இவரது கருத்து என்ன என்பதை அறிய உலக ஊடகங்கள் முயற்சித்தன. இவரது கருத்துகள் கிடைக்கவில்லை. காரணம் இவரே கிடைக்கவில்லை! எந்தப் பொது விழாவிலும் அவரைக் காணோம். ஒருவேளை பிறந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறாரோ? ஆனால் லண்டனில் உள்ள அவரது பிறந்த வீட்டினர் அங்கு அஸ்மா வரவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றனர். எங்கே அஸ்மா? அரண்மனையில் ரகசியமாக சிறை வைக்கப்பட்டுள்ளாரா? பரபரப்பான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

உள்நாட்டில் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு புறமிருக்க, இந்த உள்ளூர் கலவரங்கள் உச்சத்தை அடைவதற்கு முன்பாக தனது அண்டை நாடுகளில் ஒன்றான லெபனானுடன் போரிட்டுக் கொண்டிருந்தது சிரியா. இன்னமும்கூட அந்த நெருப்பு அணைந்த பாடில்லை. செப்டம்பர், 2014ல் ஐ.நா.பாதுகாப்புக் குழு ஒரு தீர்மானம் போட்டது. லெபனானில் உள்ள தனது 15,000 ராணுவ வீரர்களை சிரியா உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். சிரியா தனது 3,000 வீரர்களை மட்டும் இடம் பெயரச் செய்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிலி படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பின்னணியாகச் செயல்பட்டது சிரியாதான் என்று பரவலாகவே பேசப்பட்டது.

இஸ்ரேலின் புலனாய்வுத் துறையில் உச்சபதவியில் இருப் பவர் பிரிகேடியர் ஜெனரல் இடாய் ப்ரூன். சிரியாவின் அதிபர் அஸாத் ரசாயன ஆயுதங்களை தீவிரவாதிகள் மீதும் தன் பொது மக்கள் மீதும் நிச்சயம் பயன் படுத்தினார் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உண்டு என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். குறிப்பாக சரின் எனப்படும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் மிக ஆபத்தான ரசாயனப் பொருள் இதில் பயன்படுத்தப்பட்டது எனக்கூறி பதற வைத்தார். பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் கூட இதை வழி மொழிந்தன. குறிப்பாக டமாஸ்கஸ், அலெப்போ, ஹோம்ஸ் ஆகிய பகுதிகளின் மீது ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன என்று கூறின.

இந்தக் கருத்தைப் பற்றி சிரிய அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அரசைப் பதற வைத்த வேறு சில நிகழ்ச்சிகள் அரங்கேறின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x