Published : 04 Oct 2015 06:13 PM
Last Updated : 04 Oct 2015 06:13 PM

சீனாவிடம் உதவி கேட்க நேரிடும்: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை

அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யாமல் தடுப்பதன் மூலம் சீனாவிடம் தங்களை உதவி கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்று இந்தியாவை நேபாளம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து நேபாள தூதர் தீப்குமார் உபாத்யாயா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா உட்பட வேறு நாடுகளின் உதவிகளை நாடும் நிலைக்கு நேபாளத்தை இந்தியா தள்ளிவிடக் கூடாது.

மற்ற நாடுகளிடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக இந்தியா கூறியுள்ளது. ஆனால், எத்தனை மணி நேரம், வாரம், மாதம் என்பது குறித்த கால கெடுவை இந்திய அரசு கூறவேண்டும். ஏனெனில் தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் இமாலயத்தில் உள்ள நேபாள நாட்டில் மிக விமரிசையாக கொண்டாடப்படும். அந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது நேபாள அரசின் கடமை.

நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது இந்தியாவும் இந்திய மக்களும் பேருதவி புரிந்தனர். அதை நேபாள மக்கள் ஒவ்வொரும் மனமார பாராட்டினர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் தடைபடும்போது இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துகின்றனர். இது இயல்புதான். இதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் தீப்குமார் உபாத்யாயா.

சமீபத்தில் நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடந்தது. அதனால் இந்திய எல்லையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேபாளத்துக்கு அத்தியவசிய பொருட்கள் செல்ல இந்திய அரசு தடை விதித்துவிட்டதாக புகார் எழுந்தது.

இதை மறுத்த இந்திய அரசு, "நேபாளத்தில் குழப்பம் நிலவுவதாலும் போராட்டங்கள் நடைபெறுவதாலும் இந்திய நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால்தான் அத்தியாவசியப் பொருட்கள் தடைபட்டுள்ளன" என்று கூறிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x