Published : 29 Aug 2014 04:22 PM
Last Updated : 29 Aug 2014 04:22 PM

சமரச முயற்சிக்கு ராணுவத் தளபதியை அழைக்கவில்லை: பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி நடந்துவரும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்த ராணுவத் தளபதி உதவியை நாடியதாக எழுந்த தகவலை நவாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.

இதைப் போராட்டமாக முன்னெடுத்துள்ள இம்ரான் கான், மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு எதிர்ப்பு பேரணியை தொடங்கி வைத்தனர்.

இப்போது, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளனர். நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் உள்பட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி, உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இம்ரான் கான் அவர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

நவாஸ் அரசின் மற்றொரு எதிர்ப்பாளரான மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி, இந்த ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். எனினும் அரசுத் தரப்பு பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் எதிர்த் தரப்பில் இருந்து அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், இம்ரான் கானையும், தாஹிர் உல் காத்ரியையும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றை மறுத்துள்ள நவாஸ், பிரச்சினைக்கு தீர்வு காண ராணுவ உதவியை நாடவில்லை என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x