Last Updated : 21 Nov, 2014 10:37 AM

 

Published : 21 Nov 2014 10:37 AM
Last Updated : 21 Nov 2014 10:37 AM

கொலைதேசமா கொலம்பியா? - 4

போரில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெற்றி பெற்றனர். கொலம்பியா விடுதலை பெற்றது. ஸ்பெயினுக்கெதிரான அந்த வெற்றிக்களிப்பில் தங்கள் தேசத்தின் பெயரை ‘கிரான் கொலம்பியா’ (Gran Colombia) என்று அறிவித்துக் கொண்டது. கொலம்பியா, வெனி சுவேலா, பனாமா, ஈக்வேடார் எனப்படும் தற்போதைய நான்கு நாடுகளையும் அப்போது சேர்த்து அந்தப் பெயரில்தான் அழைத்தனர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஈக்வேடார் மற்றும் வெனிசுவேலாவின் சில பகுதிகள் மீது தங்களுக்கு இருந்த பிடியை ஸ்பெயின் அப்போது விட்டுக் கொடுத்து விடவில்லை.

அனைவரும் எதிர்பார்த்தபடி சைமன் பொலிவர் சுதந்திர கொலம்பியாவின் தலைவரானார். பாலா சன்டன்டர் என்பவர் துணை ஜனாதிபதி ஆனார். இவர்கள் இருவருமே மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். ஆனால் அடிப்படையில் இவர்களுக் கிடையே ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது.

பொலிவர் மரபுசார் கட்சியைச் சேர்ந்தவர். அதாவது கன்சர்வேடிவ் பார்ட்டி. சன்டன்டர் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது பொலிவர் எண்ணம். ஆனால் மாநில சுயாட்சிக்கு ஆதரவாக இருந்தார் சன்டன்டர்.

அப்போது ஸ்பெயினின் பிடியில் இன்னமும் இருந்தன ஈக்வேடார், பெரு, பொலிவியா போன்ற பகுதிகள். அவற்றிற்கும் சுதந்திரம் வேண்டும் என்று கருதி னார் பொலிவர். இதற்காக அவர் அடிக்கடி அந்தப் பகுதிகளுக்குச் செல்ல நேரிட்டது. அங்கிருந்து பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இதன் காரணமாக கொலம்பியத் தலை நகரிலிருந்து அவர் தள்ளியிருக்கும் காலகட்டம் அதிகமானது. 1822-ல் ஈக்வேடார் சுதந்திரம் பெற்றது. கையோடு அது கொலம்பியாவின் அங்கமானது.

அந்தக் காலகட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு துணை ஜனாதிபதி சன்டன்டருக்கு வந்து சேர்ந்தது. ‘’கொலம்பியா மிகப் பெரிய தேசம். பல்வேறு பகுதிகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து அளிப்பதுதான் முறை’’ என்று எண்ணிச் செயல்பட்டார் அவர்.

கொலம்பியா விரைவில் பிளவு பட்டது. இதற்குப் பல்வேறு கார ணங்கள் உண்டு என்றாலும் சன்டன்டர் அளித்த அதீத உரிமைகளும் ஒரு காரணம். தவிர தங்கள் பகுதியைச் சேர்ந்த பொலிவரின் எண்ணங்களுக் கெதிராக சன்டன்டர் செயல்படுவது வெனிசுவேலாவுக்குப் பிடிக்க வில்லை. எனவே அவர்கள் தனிநாடு கோரத் தொடங்கினர். போராட்டங்களில் இறங்கினர்.

1830-ல் வெனிசுவேலாவும் ஈக்வேடாரும் தனிநாடுகளாகப் பிரிந்தன. ஆக பொலிவரின் பரந்துபட்ட கொலம்பியா என்ற கனவு சில வருடங்களுக்குதான் நீடித்தது. பரப்பு சுருங்கிய கொலம் பியா எதிர்நீச்சல் அடிக்கத் தொடங் கியது. அதில் மேற்படி இரண்டு கட்சிகளும் நேரெதிர் அணிகளாக இருந்து கலவரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 19ம் நூற்றாண்டில் மட்டும் எட்டு பெரும் உள்ளூர்க் கலவரங்களைச் சந்தித்தது கொலம்பியா.

அதுவும் 1899-ல் ஆட்சி செய்த கன்சர்வேடிவ் கட்சியினருக்கு எதிராக லிபரல் கட்சியினர் நிகழ்த்திய புரட்சி ஒரு போருக்கே வழிகோலியது. அதை ‘ஆயிரம் நாட்கள் போர்’ என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. போரின் முடிவில் கர்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி. ஆனால் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். போதாக்குறைக்கு 1903-ல் பனாமாவில் பலவித பிரிவினை எண்ணங்களை விதைத்து அதைத் தனி நாடாக்கியது அமெரிக்கா.

அமெரிக்கா-சோவியத் யூனி யன் பனிப்போர் கொலம்பியாவை யும் 1950-க்களில் எட்டியது. லிபரல் அணியைச் சேர்ந்தவர்கள் இடது சாரிக் கொள்கைகளை கடைப் பிடிக்கத் தொடங்கினார்கள். செல் வந்தர்களுக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள். இதை சமாளிக்க அங்குள்ள ஜமீன்தார்கள் தாங் களே சின்னச்சின்ன ‘ராணுவத்தை’ உருவாக்கிக் கொண்டார்கள்.

கொலம்பியாவில் முதலாளித் துவமும், கம்யூனிஸமும் நேருக்கு நேராக மோதிக் கொள்ளத் துவங்கின. ஏழை மக்கள் (அவர்களின் எண்ணிக்கைக்குக் கொலம்பி யாவில் குறைவே இல்லை) மார்க்ஸிய வலையில் விழுந்த னர். கெரில்லா போர் முறையைப் பின்பற்றிய இந்த இடதுசாரித் தீவிரவாதிகள் நாட்டின் செல் வந்தர்களுக்குப் பெரும் அச்சுறுத் தலை அளிக்கத் தொடங்கினார்கள்.

எதிர்கட்சிகளுக்கு சட்ட அந்தஸ்து இனி கிடையாது என்று அறிவித்தது அரசு. இதன் முக்கிய நோக்கம் எதிர்க் கட்சியாகிவிட்ட லிபரல் கட்சியை ஒடுக்குவதுதான். ஆனால் தீவிரவாத அமைப்புகள் உருவாவதையும், வளர்வதையும் அரசால் தடுக்க முடியவில்லை. முக்கியமாக FARC மற்றும் ELN ஆகிய தீவிர அமைப்புகளை.

அரசு ஊழல் நிறைந்ததாகவும், சுயநலம் மிக்கதாகவும் இருந்த காரணத்தால் இடதுசாரி கெரில் லாக்களுக்கு ஆதரவு பெருகியது. நாட்டில் போதைமருந்து ஆறாக ஓடுவதற்கும், போதைக் கடத்தல் உச்சத்தை அடைந்ததற்கும் அரசுதான் காரணம் என்றனர் இடதுசாரிகள். அரசு, ராணுவம், போதை வியாபாரிகள் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் எதிராக தீவிரமாகச் செயல்பட்டனர்.

ஆனால் அவர்கள் போதாத காலம் உலக நாடுகளில் கம்யூனிஸம் மெல்ல மெல்ல வலுவிழந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியன் மேற்கூறிய இரண்டு தீவிர அமைப்புகளுக்கும் செய்து வந்த உதவிகளை நிறுத்திக் கொண்டது. இதன் விளைவு பெரும் விபரீதமானது.

அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டத்துக்கு நிறைய தொகை வேண்டுமே என்ன செய்யலாம்? யோசித்த அந்த அமைப்புகள் தாங்களும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடத் தொடங்கின. தவிர அரசு மற்றும் பணக்கார வர்க்கத்தினரைப் பணயக் கைதி களாக்கி, பணம் பார்க்கத் தொடங் கினார்கள்.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x