Published : 01 Aug 2014 11:25 AM
Last Updated : 01 Aug 2014 11:25 AM

காஸாவில் 3 நாள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்

ஐ.நா அறிவுறுத்தலைத் தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு, ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேல் ராணுவமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், போர் நிறுத்தத்திற்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய சரிமாரி குண்டு மழைத் தாக்குதலில் 17 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கு மேலாக போர் நீடித்துவருகிறது. ஆபரேஷன் புரடக்டிவ் எட்ஜ் என இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போருக்கு பெயர் வைத்துள்ளது.

இந்தத் தாக்குதலில், பாலஸ்தீனர்கள் 1450-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இவர்களில் குழந்தைகளே அதிகம். இதனையடுத்து, ஐ.நா.-வும், அமெரிக்காவும் கூட்டாக இணைந்து காஸா தாக்குதலை மனிதாபிமான அடிப்படையில், எந்த நிபந்தனையும் இன்றி 72 மணி நேரத்திற்கு நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 28 ஆம் தேதி அமல்ப்படுத்தப்பட்ட 24 மணி நேர போர் நிறுத்தம் முடிவு பெற்ற பின்னர், இஸ்ரேல் ராணுவம் காஸா முனையில் உள்ள ஐ.நா பள்ளி வளாகம் தகர்க்கப்பட்டது.

இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகுந்த கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.

ஆனால், காஸா முனையில் பதுங்கி தாக்குதல் நடத்திய, ஹமாஸ் இயக்கத்தினருக்கு பதிலடி தரவே தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் அருகே இருந்த பள்ளி மீதான தாக்குதல் எதிர்பாரதது என்று இஸ்ரேல் விளக்கமளித்தது.

72 மணி நேர போர் நிறுத்தம்:

இந்த சம்பவத்தை தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஐ. நா பொது செயலாளர் பான் கீ மூனும் வியாழக்கிழமை இரவு அழைப்பு விடுத்தனர். இதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இருத்தரப்பும் ஏற்று அதற்கான ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணி முதல் தொடர்ங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த போர் நிறுத்தம் செயல்பாட்டில் இருக்கும்.

ஹமாஸ் இயக்கத் தலைவர் கத்தாரில் உள்ள ஹமாஸ் இயக்க உறுப்பினர் கலீத் மிஷால், மூன்று நாள் போர் நிறுத்ததிற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக, கத்தாரைச் சேர்ந்த ஹமாஸின் மற்றொரு உறுப்பினர் இஸாத்-அல்-ரேஷிக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

72 மணி நேர போர் நிறுத்த காலத்தில், எகிப்து தலைநகர் கெய்ரோவில், இஸ்ரேல் மற்றும் காஸா இயத்தினர் மறைமுக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் போர் நிறுத்தம் அமல்படுத்துவதற்கு சற்று முன்னர் வரை, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 17 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் காஸாவில் நடத்து வரும் சண்டையில், கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,450-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். இஸ்ரேல் ராணுவத் த்ரப்பில் 67 வீரர்களும், பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் எல்லை தாண்டிச்சென்று ஊடுருவி தாக்குதல் நடத்த பயன்படுத்தும் சுரங்கப்பாதைகள் அனைத்தையும் தாங்கள் கண்காணித்து வருவதாகவும், அவை அனைத்தும் கூடிய விரைவில் தகர்க்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், போர் நிறுத்த நிறுத்தம் என்பது அமலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த தாக்குதல் நடத்தப்படுவது உறுதி என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x