Last Updated : 25 Nov, 2015 10:07 AM

 

Published : 25 Nov 2015 10:07 AM
Last Updated : 25 Nov 2015 10:07 AM

கருப்பு பண விவகாரம்: காங். மூத்த தலைவர் வங்கிக் கணக்கு குறித்து விசாரணை- சுவிட்சர்லாந்து அரசிடம் உதவி கோருகிறது இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக 1195 பேரின் பெயர் விவரங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த ஜூனில் வெளியிட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர், அவரது மகன் ரணீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 638 பேர் தாங்களாக முன்வந்து கருப்பு பண விவரங்களை தெரிவித்தனர்.

ஆனால் பிரனீத் கவுரும் அவரது மகன் ரணீந்தர் சிங்கும் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தகவலை சுவிட்சர் லாந்தின் வரி நிர்வாக அமைப்பு நேற்று தெரிவித்தது. பிரனீத் கவுர், ரணீந்தர் சிங் ஆகியோரின் குடியுரிமை, பிறந்த தேதி விவரங் களை அந்த அமைப்பு வெளியிட் டுள்ளது. வேறு எந்த தகவல்களை யும் வெளியிடவில்லை.

இதுதொடர்பாக பிரனீத் கவுரும் ரணீந்தர் சிங்கும் 10 நாட்களுக்குள் சுவிட்சர்லாந்து அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு சட்டப்படி குறிப்பிட்ட நபரின் கருப்பு பண விவரங்களை கோர முதலில் சுவிட்சர்லாந்து அரசின் வரி நிர்வாக அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய ஆதாரங்களை அளித்தால் குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள் அளிக்கப்படும்.

இந்திய அரசிடம் உள்ள தகவல்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெறப்பட்டவை. அவை எச்.எஸ்.பி.சி. முன்னாள் ஊழியர் ஒருவர் அந்த வங்கியில் இருந்து திருடிய தகவல்கள் ஆகும். அதை ஆதாரமாக ஏற்க சுவிட்சர்லாந்து அரசு மறுத்து வருகிறது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x