Last Updated : 25 Feb, 2017 02:41 PM

 

Published : 25 Feb 2017 02:41 PM
Last Updated : 25 Feb 2017 02:41 PM

கன்சாஸ் கொலைக்கு ட்ரம்ப்பை தொடர்புபடுத்துவது அபத்தமானது: வெள்ளை மாளிகை

கன்சாஸ் துப்பாக்கிச் சூட்டையும், ட்ரம்பின் நடவடிக்கையும் தொடர்புபடுத்துவது அபத்தமாக உள்ளது என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இந்திய பொறியாளரை அங்குவந்த ஆடம் பூரிண்டன் எனும் கடற்படை நபர் ''என் நாட்டை விட்டு வெளியேறு'' என்று கூறிக்கொண்டே சுட்டுக் கொன்றார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்பின் குடியுரிமை கொள்கை மாற்றம் ஆகிய நடவடிக்கைகள் காரணமாகத்தான் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு இனவெறி தாக்குதல் முடுக்கிவிடப்பட்டுள்ளதா? போன்ற விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கான்சாஸ் துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் ட்ரம்பின் பதில் என்ன? அவரது நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் வன்முறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சீன், "கண்டிப்பாக கான்சாஸ் சம்பவத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது. ஆனால் இந்தச் சம்பவத்தையும், அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையும் இணைத்துப் பேசுவது அபத்தமானது என்று நினைக்கிறேன்.நான் இதை பற்றி வேறு ஏதும் கூற விரும்பவில்லை" என்றார்.

விரைவான விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை:

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா கொலை தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இந்திய வெளியுறவுத் துறை விரைவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரியுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் பிரதிக் மாத்தூர் கூறும்போது, "இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கொலை தொடர்பாக துரிதமான விசாரணைக்கு உத்தரவிடுமாறு அமெரிக்க குற்றவியல் துறையிடம் கோரப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பிலும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க தரப்பில் உறுதியளித்திருக்கிறார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x