Published : 21 May 2015 10:37 AM
Last Updated : 21 May 2015 10:37 AM

ஓராண்டில் 153 கிலோ உடல் எடை குறைத்து ‘ஜேம்ஸ் பாண்ட் செய்த சாதனை

ஓராண்டில் தன் உடல் எடையில் 153 கிலோவைக் குறைத்து 'ஜேம்ஸ் பாண்ட்' சாதனை படைத்துள்ளார். அதன் மூலம் அவர் தற்போது உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபார்ட்ஷைர் எனும் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் பாண்ட் (38). ஆனால் அவரால் திரைப்படத்தில் வரும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போன்று சாகசங்க‌ள் செய்ய முடியாது. அதற்குக் காரணம் அவரின் உடல் பருமன்.

சுமார் 293 கிலோ உடல் எடை கொண்ட ஜேம்ஸ் தனது 16வது வயது முதல் நொறுக்குத் தீனி பழக்கத்துக்கு அடிமையானார். ஒரு நாளைக்கு சுமார் 18 சிப்ஸ் பாக்கெட்டுகளும், 12 லிட்டர் ஆரெஞ்சு பழச்சாறும் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உடையவராக இருந்தார்.

இதனால் அவரின் உடல் எடை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், ஒரு நாள் அவர் தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மயக்கமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், ஜேம்ஸ் பாண்டை உடனடியாக எடை குறைக்க அறிவுறுத்தினர். இல்லையெனில் அவர் கொஞ்ச நாட்களே வாழ்வார் என்றும் எச்சரித்தனர்.

இதனால் கலக்கமடைந்த ஜேம்ஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் மூலம், ஒரே ஆண்டில் 153 கிலோ எடை குறைத்துள்ளார்.

ஆயினும் தற்போது அவர் 140 கிலோ எடை உள்ளார். இதனால் அவரின் உடல் நிறை எண் 43 ஆக உள்ளது. இந்த அளவும் கூட, உடல் பருமனாக இருப்பதற்கான அறிகுறிதான். ஆனாலும், அவரால் தற்போது சராசரி மனிதர்கள் செய்யும் பணிகளையும் செய்ய முடியும். மேலும், இன்னும் தனது உடல் எடையைக் குறைக்க அசாத்திய ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "நான் கோபப்படும்போதெல்லாம் நிறைய சாப்பிடுவேன். அது எனது கோபத்தைத் தணிப்பதாக இருக்கும். அதனால் உடல் எடை அதிகரித்து அவதியுற்றேன்.

தற்போது உடல் எடையை கணிசமாகக் குறைத்திருப்பதால் என்னால் நடக்க முடிகிறது. சைக்கிள் ஓட்ட முடிகிறது. இதனால் என் வாழ்க்கையே மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது" என்றார்.

இந்த சாதனையைப் படைத்த காரணத்துக்காக, அவரை அப்பகுதிமக்கள் 'ஜேம்ஸ் பாண்ட் 00 ஹெவென்' என்று அழைத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x