Last Updated : 23 Oct, 2014 06:39 PM

 

Published : 23 Oct 2014 06:39 PM
Last Updated : 23 Oct 2014 06:39 PM

எரிமலை சீற்றம் ஜப்பான் முழுதையும் அழித்து விடும்: ஆய்வில் திடுக்கிடும் தகவல்

ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய எரிமலை சீற்றம் ஜப்பான் என்ற நாட்டை இல்லாமல் அழித்து விடும் என்று கூறுவது மிகையான கூற்று அல்ல” என்றார்.

கடந்த 1,20,000 ஆண்டுகளாக எவ்வளவு கால இடைவெளியில் எந்த அளவில் எரிமலை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை யொஷியுகி டட்சுமி தலைமையிலான புவி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அடுத்த 30 ஆண்டுகளில் கோபே நகரத்தை மிகப்பெரிய பூகம்பம் தாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. 1995ஆம் ஆண்டு 7.2 ரிக்டர் அளவில் கோபே நகரத்தைப் பூகம்பம் தாக்க அதில் 6,400 பேர் மரணமடைந்து 4,400 பேர் காயமடைந்ததையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம், கோபே பூகம்ப அபாயம் குறித்து இந்த பூகம்பம் தாக்குவதற்கு முதல்நாளே இதே ஆய்வாளர்கள் குறிப்பிட்டது முக்கியத்துவம் வாய்ந்தது.

"எனவே எப்போது வேண்டுமானாலும் பயங்கர எரிமலை வெடிப்பு ஏற்படலாம்” என்று இந்த ஆய்வறிக்கை பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது

ஜப்பானில் உள்ள மவுண்ட் ஆன் டேக் முன்னெச்சரிக்கை அறிகுறிகள் எதுவுமின்றி சமீபத்தில் வெடித்தது. இதில் 57 பேர் பலியாகினர். கடந்த 90 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றம் இது என்று கூறப்படுகிறது.

கடந்த 10,000 ஆண்டுகளில் 7% எரிமலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஜப்பானில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

தெற்குமுனையில் உள்ள கியூஷுவில் உள்ள எரிமலையில் கடந்த 1,20,000 ஆண்டுகளில் பயங்கரச் சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இன்னொரு பேரழிவு சீற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி அங்கு எரிமலை வெடிக்குமேயானால் அதிலிருந்து வெளிவரும் எரிமலைக் குழம்பு மற்றும் எரிபாறைகள் 2 மணிநேரத்தில் 70 லட்சம் மக்களை அழித்துவிடும் என்று பயங்கர அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர் இந்த புவி விஞ்ஞானிகள்.

மேலும் எரிமலை சீற்றத்தினால் கிளம்பும் சாம்பல் மேற்குக் காற்றினால் உள்புறத் தீவான ஹோன்சு வரை பரவும் அபாயம் உள்ளது. இதனால் ஜப்பான் முழுதும் வாழ முடியாத நிலப்பிரதேசமாகிவிடும்.

ஹோன்சுவை சுற்றி இருக்கும் நகரங்கள் மற்றும் ஊர்களில் வாழும் 120 மில்லியன் மக்கள்தொகையை காப்பாற்ற வாய்ப்பே இல்லை. ஒட்டுமொத்தமாக மேக்மா எவ்வளவு இருக்கிறது என்பதை ஆய்வு செய்யும் புதிய தொழில்நுட்பம் தேவை என்று இந்த ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.

28,000 ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு கியுஷூவில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றத்தை ஆய்வு மேற்கொண்ட போது நிலவியல் நிபுணர்கள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு தனது கண்டுபிடிப்புக்கு ஆதாரமாகக் கோரியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x