Published : 25 Oct 2014 01:27 PM
Last Updated : 25 Oct 2014 01:27 PM

எபோலா: நைஜீரியாவிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

எபோலா நோயை துரிதமாக கட்டுப்படுத்துவதில், நைஜீரியாவின் சாதனையில் இருந்து இந்தியா உள்பட உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜூலை 2014, நைஜீரிய நாட்டின் லாகோஸ் விமான நிலையத்திற்கு ஒரு அழையா விருந்தாளி வந்திறங்கினார். மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் நோய் வாய்ப்பட்டிருந்த தனது சகோதரியை பேணி வந்த அந்த நபர் திடீரென நோய் வாய்ப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முற்பட்டது மருத்துவமனை. ஆனால், சிகிச்சைக்கு உட்படாமல் அந்த நபர் விமானம் ஏறி நைஜீரியா வந்தடைந்தார். அவர் மட்டும் வரவில்லை. நோய்க்கிருமியையும் கொண்டு வந்தார்.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரான லாகோஸ், கடல், வான், தரை வழிப் போக்குவரத்தின் முக்கிய புள்ளியாக உள்ளது. இந்தியாவின் மும்பை நகரம் போன்ற மக்கள்தொகை உடையது, லாகோஸ். அங்கு சேரிப் பகுதிகளும் அதிகம்.

மக்கள்தொகை, சேரிச்சூழல் இரண்டுமே அங்கு நோய்க்கிருமி வெகு விரைவாக பரவ ஏதுவாக இருந்தது.

நைஜீரியாவில் எபோலா பரவியது குறித்த செய்தியை வெளியிட்ட வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்று, "அதிக மக்கள்தொகையும், நெரிசல்மிகு உட்கட்டமைப்பும் நோய் பரவுவதற்கும், நோய்க்கிருமி நீண்ட காலம் உலா வருவதற்கும் சாதகமாக இருந்தது" என குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

எபோலாவால் பாதிக்கப்பட்ட லைபீரிய நாட்டைச் சேர்ந்தவருடன் நெருக்கமாக இருந்த நபர் ஒருவர் போர் ஹற்கோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதே, நைஜீரியாவில் நோய் தொற்று தீவிரமடைந்தது.

அந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சில நாட்களில் இறந்தார். நோய் தொற்று ஏற்பட்டதை அறியாத அவர் வழக்கம்போல் அது தீவிரடமடைந்து அவரை படுக்கையில் தள்ளும்வரை தன்னிடம் வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தார். பாதிக்கப்பட்ட அவரிடம் சிகிச்சை பெற்ற பலருக்கும் எபோலா தொற்று ஏற்பட்டது. இவ்வாறே, நைஜீரியாவில் எபோலா வேகமாக பரவியது.

ஆனால் அதைவிட வேகமாக இயங்கிய நைஜீரிய அரசு எபோலா வைரஸை அந்நாட்டில் இருந்து ஒழித்துக்கட்டியுள்ளதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆம், அக்டோபர் 20-ல் உலக சுகாதார மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நைஜீரியாவில் எபோலா அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

நைஜீரியாவின் துரித செயல்பாடு, எபோலா அச்சுறுத்தலில் இருந்து தப்ப முடியாமல் தவிக்கும் கினியா, லைபீரியா, சியாரா லியோன் போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு அருமருந்தாக அமையும்.

ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியா, எங்கிருந்தோ வரும் பயணியால் பரப்பப்படும் நோயைக்கூட நைஜீர்யா போன்ற வளரும் நாடுகள், தாங்கள் எடுக்கும் துரித, வலுவான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த முடியும்.

எபோலாவை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்து சிகிச்சைக்கு உட்படுத்துவதோடு, அவர்களுக்கு நெருக்கமானவர்களை கண்காணிப்பதிலேயே இருக்கிறது. இதற்கு முந்தைய காலங்களில் எபோலா தொற்று ஏற்பட்டபோதும் இத்தகைய நடவடிக்கைகள் மூலமே அந்த கொடிய வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நடைமுறையை சிறிய தவறுகூட இல்லாமல் பின்பற்றியது நைஜீரியா. அந்நாட்டில் போலியோ ஒழிப்புத் திட்டத்தில் பணியாற்றிய தேர்ந்த மருத்துவ குழுக்களை பயன்படுத்தியதோடு, உயர் தொழில்ட்நுட்பத்தையும் உபயோகித்தது. இவற்றையெல்லாம் சிறந்த முறையில் மேலாண்மை செய்யவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. விளைவு 900 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தியது அந்நாட்டு அரசு. அவர்களில் 19 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 19 பேரில் பலர், நோய்க்கிருமியைக் கொண்டுவந்த லைபீரியருக்கு சிகிச்சை அளித்தவர்களாவர். இவர்களில் 7 பேர் நோய்க்கு பலியாகினர். நைஜீரியாவின், எபோலா இறப்பு விகிதம் 40% இது மற்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

நைஜீரியாவின் சாதனையில் இருந்து இந்தியா உள்பட உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழில்: பாரதி ஆனந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x