Last Updated : 25 Apr, 2015 10:25 AM

 

Published : 25 Apr 2015 10:25 AM
Last Updated : 25 Apr 2015 10:25 AM

எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 2

ஏமனில் தற்போது நடைபெறும் கலவரங்களின் ஆணிவேர் என்று இஸ்லாமின் இரு பிரிவுகளுக்கிடையே உள்ள விரோதத்தைக் கூறலாம்.

இஸ்லாமிய மார்க்கத்தின் சன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருமே (முக்கிய மாக அவற்றின் பல தலைவர்கள்) ஒருவரை யொருவர் கடும் பகைவர்களாகத்தான் பார்க்கிறார்கள். எதனால் இந்தப் பிளவு? பல்வேறு நாடுகள் பற்றிய விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் இந்தப் பகுதியில் ஏற்கெனவே இது குறித்து நாம் ஓரளவு விளக்கியிருந்தாலும் இப்போது அதை மேலும் விளக்கமாக அறிந்து கொண்டால்தான் ஏமனில் நடக்கும் கலவரங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

முகமது நபிகள் பரப்பிய இஸ்லாமிய மார்க்கம் அவருக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்து நின்றது. நபிகள் நாயகத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் யாராக இருக்க வேண்டும்? இதில்தான் கருத்து வேறுபாடுகளும் பிளவும்.

ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் காலிஃப் (அதாவது முகமது நபியின் வாரிசுகள்) தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். இவர்கள் தங்களை `சன்னி’ என்று அறிவித்துக் கொண்டனர்.

இரண்டாவது பிரிவினர் தங்களை `ஷியா’ என்று கூறிக் கொண்டனர். இவர் களைப் பொருத்தவரை முகமது நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பரம்பரையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தலைவராக இருக்கலாம்.

சன்னி, ஷியா ஆகிய இரு பிரிவினருக் குமே பல அடிப்படை ஒற்றுமைகள் உண்டு. இருதரப்பினருமே நபிகள் நாயகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள். ஹஜ் யாத்திரையை முக்கியமானதாகவும், புனிதமானதாகவும் கருதுபவர்கள். என்றாலும் வேறு சில வேறுபாடுகள் பூதாகரமாகி விட்டன.

அப்படி என்ன இந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே வேறுபாடு? தெரிந்து கொள்வோம். சன்னி முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மார்க்கத்தின் தொன்மையான பிரிவினர் என்று கருதுகிறார்கள். சொல்லப் போனால் சன்னி என்ற வார்த்தையே “அஹ்ல் அல்-சுன்னா’’ என்ற வார்த்தை யிலிருந்து உண்டானதுதான். இதன் பொருள் தொன்மையான மக்கள் என்பதா கும். தொன்மை என்றால்? நபிகள் நாயகத் தின் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவது. நபிகள் நாயகத்தைத்தான் இறுதியான இறைத்தூதர் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

ஷியா பிரிவு ஓர் அரசியல் பிரிவாகவே தொடக்கத்தில் கருதப்பட்டது. `ஷியட் அலி’ என்ற வார்த்தைகளிலிருந்து உருவானது தான் ஷியா என்ற சொல். ஷியட் அலி என்றால் அலியின் கட்சி என்று பொருள்.

அலி என்பவர் நபிகள் நாயகத்தின் மருமகன். முகமது நபி இறக்கும்போது அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே அவரது மகளின் கணவரான அலி என்பவரையே அவரது வாரிசாக ஏற்றுக் கொண்டனர் ஷியா பிரிவினர்.

ஆனால் உள்நாட்டுப் போர்களின் காரண மாக அலி கொல்லப்பட்டார். அவருடைய மகன்கள் (அதாவது நபிகள் நாயகத்தின் மகள் வழிப் பேரன்கள்) ஹாசன் மற்றும் உசேன். இவர்களுக்கே அடுத்த வாரிசுப் பதவி என்று ஷியா பிரிவினர் கருதினர். ஆனால் ஹாசன் எதிர்பாராத விதத்தில் இறந்தார்.

இவருக்கு விஷம் வைத்துக் கொன்றவர் முவாவியா (இவரே முதலாம் காலிஃப் அதாவது முஸ்லிம்களின் தலைவர்) என்று ஷியா பிரிவினர் கருது கிறார்கள். அலியின் மற்றொரு மகனான உசேன் யுத்தகளத்தில் கொல்லப்பட்டார்.

இப்போது உலகில் உள்ள ஷியா பிரிவினரின் எண்ணிக்கை சுமார் 15 கோடி. ஆனால் சன்னி பிரிவினரின் எண்ணிக்கை இதைப்போல சுமார் பத்து மடங்கு.

ஈரான், இராக், அஜர்பைஜான், ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஷியா பிரிவினர் மெஜாரிட்டியாக உள்ளனர்.

கி.பி.632-ல் முகமது நபி இறந்தபோது அவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது. அடுத்து இஸ்லாமிய மார்க்கத்தை தலைமை ஏற்று நடத்தக்கூடிய வாரிசு யார்?

முகமது நபிகள் குராஷ் இனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இனத்தைச் சேர்ந்த, இஸ்லாமிய மார்க்கத்தில் பெருநம்பிக்கை கொண்ட ஒருவர்தான் வாரிசாக வேண்டும் என்று கருதியவர்கள் காலப்போக்கில் சன்னி பிரிவாக அறியப்பட்டனர். வாரிசு என்பவர் நபிகள் நாயகத்தில் ரத்த சம்பந்தம் உள்ளவர்களாகவே இருக்க வேண்டும் என்று வாதிட்ட பிரிவினர் நாளடைவில் ஷியா பிரிவாக அறியப்பட்டனர்.

தொடக்கத்திலேயே சில பிரச்சினைகள் உண்டாயின. நபிகள் நாயகத்தின் மாமனார் அபு பக்கர். இவர் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் குராஷ் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஷியா பிரிவினரால் இதை ஏற்க முடியவில்லை. மாமனார் எப்படி நேரடி ரத்த சொந்தம் கொண்டவராக இருக்க முடியும்? எனவே அவரைத் தலைவராக ஏற்க முடியாது.

இப்படி ஏற்க மறுத்த பிரிவினர் நபிகள் நாயகத்தின் மாப்பிள்ளையும், மற்றபடி அவருக்கு ஒன்று விட்ட சகோதரனுமான அலியைத் தலைவராக அறிவித்தனர்.

நாளடைவில் அலி நான்காவது மதத் தலைவராக (காலிஃப்) அறியப்பட்டார். ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவினருமே அவரை மதித்தனர். ஆனால் ஷியா பிரிவைப் பொருத்தவரை முகமது நபிக்குப் பிறகு மிக முக்கியமான மதத் தலைவர் அலிதான். இடைப்பட்ட மூவர் அல்ல.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x