Published : 04 Oct 2015 12:32 PM
Last Updated : 04 Oct 2015 12:32 PM

உலக மசாலா: ரசனையான விடுதி!

உலகின் முதல் மணல் கோட்டை தங்கும் விடுதிகள் ஹாலந்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் கடற்கரைகளில் மணற் சிற்பங்கள் உருவாக்கி வருகிறார்கள். ஹாலந்தின் ஓஸ், ஸ்நீக் என்ற இரண்டு நகரங்களில் ஆண்டுதோறும் மணற் சிற்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தத் திருவிழாவுக்குப் பொருத்தமாக தங்கும் விடுதிகள் மணற் சிற்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது கான்க்ரீட் சுவர்களுக்கு மேலே மணல் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். விடுதியின் தங்கும் அறைகளிலும் மணலால் சுவர்களைப் பூசியிருக்கிறார்கள். களிமண் சிற்பங்களை ஆங்காங்கு வைத்திருக்கிறார்கள். மணல் விடுதியாக இருந்தாலும் அனைத்து நவீன வசதிகளும் இந்த அறைகளில் செய்யப்பட்டிருக்கின்றன. பழங்காலத்து மண் சுவர் வீடுகளுக்குள் நுழைந்தது போலத் தோன்றினாலும் வசதிகளில் இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. ஓர் அறை முழுவதும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும் இன்னோர் அறை முழுவதும் சீன டிராகன்களும் இடம்பெற்றுள்ளன. மணற் சிற்பத் திருவிழாவுக்கு 4 வாரங்களுக்கு முன்பு இந்த விடுதியை உருவாக்குகிறார்கள். ’’பனிக்கட்டி சிற்பங்களால் உருவான தங்கும் விடுதிகளை ஸ்வீடனிலும் பின்லாந்திலும் பார்த்திருக்கிறேன். அதிலிருந்துதான் மணற் சிற்பத் தங்கும் விடுதி உருவானது. மணலால் உருவான அறைகள் என்றாலும் தங்குபவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது’’ என்கிறார் இதன் உரிமையாளர். ஓர் இரவு தங்குவதற்கு 11 ஆயிரம் ரூபாய் கட்டணம். இரண்டு நகரங்களிலும் 30 பெரிய மணற் சிற்பங்கள் இந்தத் திருவிழாவின்போது உருவாக்கப்படுகின்றன. இதற்காக 8 லட்சம் கிலோ மணல் பயன்படுத்தப்படுகிறது. திருவிழா முடிந்தவுடன் இந்த மணல் விடுதிகளும் மூடப்பட்டுவிடுகின்றன. விடுதிகளுக்குக் கிடைத்த வரவேற்பால் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் விடுதிகளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

ம்… ரசனையான விடுதி!

அமெரிக்காவில் வசிக்கிறார்கள் டயானா, லாரி மோயர் தம்பதியர். இவர்களின் செல்லப் பிராணி ஜிம்மி என்ற 9 மாதக் குட்டி கங்காரு. டயானா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரே ஆறுதல் ஜிம்மிதான். விதவிதமான ஆடைகளை ஜிம்மிக்குப் போட்டு அழகு பார்க்கிறார் டயானா. ‘’எனக்குப் புற்றுநோய் என்று அறிந்த அன்று நான் மிகவும் உடைந்து போய்விட்டேன். என்னைத் தேற்றும் விதத்தில் என் கணவர் இந்தக் கங்காரு குட்டியைப் பரிசளித்தார். என் நோயை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஜிம்மிதான் காரணம். எப்பொழுதும் என் அருகிலேயே இருக்கும். என்னை ஆதரவாக அணைக்கும். விளையாடும். நான் சிறிது நேரம் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தால் என் கவனத்தை திசை திருப்பி, என் மனநிலையை மாற்றிவிடும். ஜிம்மிக்குப் பிடித்த மக்ரோனி சீஸை நான் கொடுப்பேன். வாரம் ஒருமுறை குளிப்பாட்டுவேன். தினமும் பல் தேய்த்துவிடுவேன்’’ என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் டயானா. ‘’ஜிம்மி வந்ததில் இருந்து என் மனைவியின் மனநிலையில் நல்ல முன்னேற்றம். மகிழ்ச்சி மரணத்தைத் தள்ளிப் போடும். என்னுடைய வேலைகளில் பாதியை ஜிம்மியே செய்துவிடுகிறது. டயானாவும் ஜிம்மியும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள், ஒன்றாகத் தூங்குவார்கள், ஒன்றாக விளையாடுவார்கள். நாங்கள் இருவரும் ஜிம்மிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்’’ என்கிறார் லாரி.

முரடு என்று நினைக்கும் கங்காருவுக்குள் எத்தனை அன்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x