Published : 21 May 2017 11:17 AM
Last Updated : 21 May 2017 11:17 AM

உலக மசாலா: மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!

பென்சில்வேனியாவில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச் சாப்பிட்டு, தாள்களைச் சேமித்து வைத்திருக்கிறார். ”நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, என் கணவர் மலாச்சியை முதல் முறை சந்தித்தேன். எனக்கு ஒரு பெரிய மிட்டாய் பாக்கெட்டைப் பரிசளித்தார். என்னால் நம்பவே முடியவில்லை, அவரும் என்னைப் போலவே இந்த மிட்டாய்களின் விசிறி என்பதை அறிந்து ஆனந்தமடைந்தேன். எங்கள் இருவருக்குமான மிட்டாய்கள் மீதுள்ள காதலே, எங்களுக்குமான காதலாக மாற்றம் அடைந்தது. மிட்டாய்களைச் சுற்றியிருக்கும் பல வண்ணக் காகிதங்களைத் தூக்கிப் போட மனமில்லாமல் சேகரிக்க ஆரம்பித்தேன். ஐந்தாண்டுகளில் ஒரு பெரிய பை நிறைய சேர்ந்துவிட்டது. இதை வைத்து உடை தயாரிக்க முடிவு செய்தேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் காகிதங்களை அழகாக மடித்துக் கொடுத்தனர். எலாஸ்டிக் நூலை வைத்து தைத்து, அழகான உடையாக மாற்றிவிட்டேன். அப்போதுதான் மலாச்சி என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். எங்கள் திருமண வரவேற்பின் போது எங்களைச் சேர்த்து வைத்த இந்த ஆடையைத்தான் அணிந்துகொண்டேன். எல்லோருக்கும் ஆச்சரியம்!” என்கிறார் எமிலி.

மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!

ருகுவேயைச் சேர்ந்த 83 வயது அல்சிடெஸ் ராவெல் விவசாயி. ஃபோர்ட் எஃப்-350 மாடல் டிரக்கை 1969-ம் ஆண்டு வாங்கினார். 48 ஆண்டுகள் இவருடன் இருந்த டிரக்கைச் சமீபத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டார். “டிரக்குக்கும் எனக்கும் உள்ள நட்பு மிக ஆழமானது. ஆரம்பத்தில் மிகச் சாதாரண விவசாயியாகத்தான் இருந்தேன். இந்த டிரக் வந்த பிறகுதான், ஒரு நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தில் விவசாயம் செய்து என் குழந்தைகளை வளர்த்தேன். டிரக் என் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். என் வாழ்க்கையின் ஒரு பகுதி. டிரக்கை வைத்து விவசாயத்தை மேம்படுத்திக்கொண்டேன். அதனால் வருமானம் அதிகரித்தது. ஒருமுறை தனியாக 400 கி.மீ. தூரத்துக்குப் பன்னிரண்டு மணி நேரம் பயணம் செய்தேன். டிரக் மட்டுமே உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது. தொடர்ச்சியான பயணங்களில் நான் விடுதியில் தங்குவதில்லை. டிரக்கிலேயே படுத்து உறங்கிவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தக் கோளாறும் டிரக்குக்கு வந்ததில்லை. அளவுக்கு அதிகமாகவே உழைத்துவிட்டது. இனிமேல் டிரக்கால் உழைக்க முடியாது. பாகங்களைப் பிரித்துப் பழைய இரும்புக் கடையில் தான் போட முடியும். என்னால் அதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? அதனால் எங்கள் நிலத்திலேயே மூன்று ஆட்களை வைத்துப் பெரிய குழி தோண்டி, டிரக்கைப் புதைத்துவிட்டேன். இது என் டிரக்குக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறேன். ஆனால் டிரக்கைப் புதைப்பதைக் கூட என் மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இறுதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை” என்கிறார் அல்சிடெஸ்.

மனிதர்களையே மதிக்காத இந்த உலகில் டிரக்குக்கு மரியாதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x