Published : 26 Feb 2017 12:28 PM
Last Updated : 26 Feb 2017 12:28 PM

உலக மசாலா: மனிதர்களின் அதிர்ஷ்டம்; ஆமையின் துரதிர்ஷ்டம்!

பிரான்ஸை சேர்ந்த 45 வயது ஆப்ரஹாம் பாய்ன்ச்வெல், அடிக்கடி ஏதாவது பரிசோதனைகளில் ஈடுபடுவார். தற்போது ஒரு பெரிய பாறையை இரண்டாகப் பிளந்து, மனிதன் உட்காரும் அளவுக்குச் செதுக்கினார். பிப்ரவரி 22 அன்று, ஆப்ரஹாம் பாறைக்குள் சென்று அமர்ந்தவுடன், பாறையின் பிளந்த இரு பகுதிகளும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டன. சிறிய விளக்கு வெளிச்சம் மூலம் பாறைக்குள் உட்கார்ந்திருக்கும் ஆப்ரஹாமை, தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து 8 நாட்கள் உட்கார்ந்த நிலையிலேயே ஆப்ரஹாம் பாறைக்குள் இருக்கத் திட்டமிட்டிருக்கிறார். தேவையான உணவும் தண்ணீரும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. காற்று செல்வதற்கான வழியைத் தவிர அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டிருக்கின்றன. “ஒரு பாறைக்குள் ஒரே நிலையில் இருக்கும்போது மனித உடல் எவ்வாறு வேலை செய்கிறது, மூளை எப்படி இயங்குகிறது என்பதைக் கவனிப்பதற்காகவே இந்தப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறேன். உலர் மாமிசமும் சூப்பும் சாப்பிடுவேன். காலியான பாட்டில்களில் சிறுநீரைப் பிடித்து மூடிவிடுவேன். வெளியில் என்னை மருத்துவர்கள் குழு கண்காணித்துக்கொண்டேயிருக்கும். ஏதாவது அசம்பாவிதம் என்றால் உடனே என்னை வெளியே எடுத்துவிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை பேசாமல் இருப்பது மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்வையாளர்கள் பாறைக்கு அருகில் வந்து பேசினால் என்னால் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியும்” என்றார் ஆப்ரஹாம். மார்ச் முதல் தேதிதான் அவர் பாறையிலிருந்து வெளிவருவார்.

கடினமான பரிசோதனையா இருக்கே… பத்திரமாகத் திரும்பி வந்தால் போதும்.

தாய்லாந்து பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் வசித்துவந்த ஓர் ஆமையின் உடலில் வீக்கமும் ஓட்டில் வெடிப்பும் காணப்பட்டன. மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் சிரமப்பட்ட ஆமையை, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஸ்கேன் செய்யப்பட்டதில் ஆமையின் வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. தாய்லாந்தில் குளத்தைக் கண்டதும் நாணயங்களைப் போடுவது வழக்கம். பல ஆண்டுகளாகக் குளத்தில் விழுந்த நாணயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியிருக்கிறது இந்த ஆமை. இரைப்பையின் பெரும்பகுதியை நாணயங்கள் அடைத்தவுடன் ஆமையால் சாப்பிட முடியவில்லை. மூச்சு விட முடியவில்லை. தண்ணீரில் நீந்த முடியவில்லை. அளவுக்கு அதிகமான நாணயங்களின் எடையால் வயிறு பகுதி வீங்க ஆரம்பித்துவிட்டது. கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்களும் மாணவர்களும் சேர்ந்து, ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3,800 ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன. “ஆமைக்கு பேங்க் என்று பெயரிட்டிருக்கிறோம். நாணயங்களை எடுத்ததிலிருந்து ஆமை வேகமாகத் தேறிவருகிறது. முற்றிலும் குணமடைய சில வாரங்கள் ஆகும். அதிர்ஷ்டம் என்பதற்காக மக்கள் குளங்களில் நாணயங்கள் வீசுவதை நிறுத்தவேண்டும். அவர்களின் செயல்களால் அப்பாவி உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய ஆமையை 25 வருடங்களிலேயே உயிரிழக்க வைப்பது எவ்விதத்தில் நியாயம்?” என்கிறார் கால்நடை மருத்துவம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர் நன்டாரிகா.

மனிதர்களின் அதிர்ஷ்டம்; ஆமையின் துரதிர்ஷ்டம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x