Published : 23 Jun 2017 09:43 AM
Last Updated : 23 Jun 2017 09:43 AM

உலக மசாலா: புத்திசாலி நாய்!

சியாட்டிலில் வசிக்கும் எக்லிப்ஸ் என்ற கறுப்பு லாப்ரடார் நாய், தினமும் பேருந்தில் தனியாகப் பயணம் செய்து வருகிறது. எக்லிப்ஸின் உரிமையாளர் ஜெஃப் யங் வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பூங்காவுக்கு பேருந்தில் அழைத்துச் செல்வார். 4 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் இருவரும் காத்திருந்தனர். பேருந்து வர தாமதமானதால் யங் ஒரு சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தார். அப்போது பேருந்து வந்துவிட்டது. அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் பொறுமையிழந்த எக்லிப்ஸ் பேருந்தில் ஏறிவிட்டது. யங் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், அது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பேருந்து கிளம்பிவிட்டது. அன்று முதல் இன்று வரை யங் வந்தாலும் வராவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறது. இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் எக்லிப்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்தப் பேருந்திலும் ஏறிச் சென்றுவிடுகிறது. ஜன்னல் ஓர இருக்கையைப் பார்த்து அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டே பூங்கா நிறுத்தம் வந்தவுடன் இறங்கிக்கொள்கிறது. கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் ஜன்னல் ஓர இருக்கைக்காகக் காத்திருக்கிறது. யாராவது இறங்கினால் தாவி ஏறி விடுகிறது. சிலர் எக்லிப்ஸை பார்த்தவுடனே இருக்கையைக் காலி செய்து கொடுத்து விடுகிறார்கள். “எக்லிப்ஸின் அழகையும் புத்திசாலித்தனத்தையும் பார்ப்பவர்கள், இது தங்களது நாய் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். 2015-ம் ஆண்டு எக்லிப்ஸின் பேருந்து பயணம் சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பிடித்தது. அதிலிருந்து ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். பலரும் போட்டோ எடுத்து, ஃபேஸ்புக்கில் போடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறது” என்று பெருமிதப்படுகிறார் யங். “நாங்கள் எல்லோருமே எக்லிப்ஸ் வருகைக்காக காத்திருப்போம். பூங்கா நிறுத்தம் வரும் வரை எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்” என்கிறார் சக பயணி டேவிட்.

பேருந்தில் தனியாகப் பயணம் செய்யும் புத்திசாலி நாய்!

பென்சில்வேனியாவில் வசிக்கும் ஜெர்ரி லின், ஒரு விநோத பிரச்சினையால் சங்கடப்படுகிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டும்போது இரண்டு சுவர்களுக்கு இடையே எப்படியோ ஒரு கடிகாரம் விழுந்துவிட்டது. அதை எடுக்க முடியாததால், சுவரைக் கட்டி முடித்துவிட்டனர். தினமும் அந்தக் கடிகாரம் இரவு 8 மணிக்கு அலாரம் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. “ஆரம்பத்தில் கடிகாரத்தின் அலாரம் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ விநோத சத்தம் என்று பயந்தேன். பிறகுதான் சுவரிலிருந்து தினமும் இரவு 8 மணிக்கு அலாரம் அடிப்பதைக் கண்டுபிடித்தோம். கடிகாரம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டோம். 13 ஆண்டுகளாக இந்த அலார சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அமைதியான வீட்டில், இரவு நேரத்தில் இப்படி அடித்தால் என்னவோ செய்கிறது. சாதாரணமாக எந்த கடிகாரத்தின் பேட்டரியும் இவ்வளவு காலம் வேலை செய்யாது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஒரு கடிகாரம் வேலை செய்வதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பத்து நிமிடங்கள் தொடர்ந்து அடிப்பதால் வீட்டுக்கு வருபவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. சுவரை இடித்து, அந்த அதிசய கடிகாரத்தைப் பார்த்துவிடப் போகிறேன்” என்கிறார் ஜெர்ரி லின்.

இவ்வளவு காலம் உழைக்கும் பேட்டரி எது என்று பார்க்கணும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x