Published : 28 Jun 2017 10:42 AM
Last Updated : 28 Jun 2017 10:42 AM

உலக மசாலா: பலருக்கு வாழ்நாள் கனவு, இவருக்கு தினசரி நடவடிக்கை!



கலிபோர்னியாவில் வசிக்கும் 44 வயது ஜெஃப் ரெய்ட்ஸ் தினமும் டிஸ்னிலேண்டுக்குச் சென்று வருகிறார். விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், கடந்த 2 ஆயிரம் நாட்களாக தொடர்ந்து டிஸ்னிலேண்ட் சென்று வருகிறார். ஆனாலும் டிஸ்னி மயக்கத்திலிருந்து இன்னும் தெளியவில்லை என்கிறார். “2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், எனக்குப் பரிசாக வருடம் முழுவதும் டிஸ்னிலேண்ட் செல்வதற்கான அனுமதி கிடைத்தது. இதை யாராலும் தினமும் பயன்படுத்த இயலாது. ஆனால் நான் தினமும் செல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் அங்கு செல்வதை மட்டுமே ஒரே வேலையாக வைத்திருந்தேன். பிறகு ஒரு வேலை கிடைத்தபோதும் நான் தினமும் செல்வதை நிறுத்தவில்லை. மாலையில் சிறிது நேரமாவது போய்விட்டு வந்துவிடுவேன். மழை, வெயில் எதுவும் என்னுடைய திட்டத்தை மாற்றவில்லை. டிஸ்னிலேண்டில் இதுதான் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாமே பிடித்திருக்கின்றன. சும்மா நடந்து செல்வதுகூட அத்தனை இன்பமாக இருக்கும். வாடிக்கையாளர்கள், ஊழியர்களிடம் உரையாடுவேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் நாட்கள் சென்றிருக்கிறேன். இங்கேதான் எனக்கு காதலி கிடைத்தார். நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். இங்கே தினமும் வருவதால் குடும்பத்திலும் நண்பர்களின் வீடுகளிலும் நடைபெறும் திருமணம், இறுதி காரியம் போன்ற நிகழ்ச்சிகளில் என்னால் பங்கேற்க முடிவதில்லை. பணமும் செலவாகிறது. 2018-ம் ஆண்டுடன் என்னுடைய அனுமதி முடிவடைகிறது. அதற்குப் பிறகும் செல்ல வேண்டுமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் தினமும் டிஸ்னிக்கு செல்வதாகப் பலரும் சொல்கிறார்கள். இங்கே வருவதால்தான் உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. இங்கிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மீது எனக்கு ஆர்வம் இல்லை. நீண்ட வரிசையில் நின்று தினமும் செல்வதும் இயலாத காரியம். டிஸ்னிக்குள் இருப்பது மட்டுமே என் விருப்பம். டிஸ்னி நிறுவனத்திலிருந்து என் வருகைக்காக நான் எந்தவிதமான சிறப்புச் சலுகையும் இதுவரை பெற்றதில்லை” என்கிறார் ஜெஃப் ரெய்ட்ஸ்.

பலருக்கு வாழ்நாள் கனவு, இவருக்கு தினசரி நடவடிக்கை!

சீனாவில் வசிக்கும் 26 வயது ஜாங் அசாதாரணமான உணவு வகைகளைச் சாப்பிடும் நிகழ்ச்சிகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு சில நூறு பார்வையளர்கள் இருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு பெரிய இலைகளைப் பச்சையாகச் சாப்பிட ஆரம்பித்தார். நடுநடுவே கற்றாழையின் பலன்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். கற்றாழை என்று நினைத்துக்கொண்டு, செஞ்சுரி தாவரத்தின் இலையை உண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. இது விஷத்தன்மையுடையது. ”ரொம்பக் கசப்பாக இருந்தபோதே சந்தேகம் வந்தது. நாக்கு மரத்துவிட்டது. தொண்டை பயங்கரமாக எரிந்தது. வயிற்றிலிருந்த இலைகளை முழுவதுமாக மருத்துவர்கள் எடுத்ததால் பிழைத்தேன்” என்கிறார் ஜாங்.

அடக் கொடுமையே…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x