Published : 19 Dec 2014 11:12 AM
Last Updated : 19 Dec 2014 11:12 AM

உலக மசாலா: டைனோசர் பறவை

ஹாரிபாட்டர் திரைப்படங்களில் பார்க்கப்பட்ட கோட்டைகள், சிண்ட்ரெல்லா கதையில் வரும் கோட்டைகளைப் போல நிஜமான கோட்டைகளாக இருந்தால் எப்படி இருக்கும்! அப்படி ஓர் அற்புதமான கோட்டையை உருவாக்கியிருக்கிறார்கள் சீனர்கள். ஹெபெய் மாகாணத்தில் ஸின்லே நகரத்தில்தான் இந்தக் கோட்டை அமைந்திருக்கிறது. சுமார் 24 கோடிகளில் உருவான இந்தக் கோட்டை, ஒரு பள்ளிக்கூடம். கலைகள் மற்றும் அனிமேஷன் பாடங்கள் இங்கு கற்பிக்கப்பட இருக்கின்றன. ஹாரிபாட்டர் பார்த்துதான் இந்த யோசனை வந்ததாக பள்ளியின் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.

அடடா! இந்தப் பள்ளிக்குப் போகமாட்டேன்னு யாராவது சொல்ல முடியுமா?

எகிப்தின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய சுடுகாடு தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த இடத்தில், ஒரு லட்சம் மம்மிகள் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். 300 ஏக்கர் பரப்பளவில், 75 அடி ஆழத்தில் இந்த மம்மிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. ரோமானியர்கள் மற்றும் பைஸாண்டைன் காலத்தைச் சேர்ந்தது இது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை இங்கே மம்மிகளாக இருக்கின்றன. அதேபோல ராஜ வம்சத்தைச் சேராத, உயர்பதவிகளில் இல்லாத சாதாரண மக்களின் மம்மிகளும் இங்கே இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் 1,700 மம்மிகள் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன.

தோண்டத் தோண்ட தீராத மர்மம்!

டிவி பார்க்கும்போது தூங்கிவிடுவது சகஜமான விஷயம். இங்கிலாந்தின் மான்செஸ்டர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ரையான் ஆலிவர், ஜொனாதன் கிங்ஸ்லி ஆகியோர் 3டி பேண்ட் ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த பேண்டை அணிந்துகொண்டு டிவி பார்க்கலாம். தூங்கிவிட்டால், பேண்ட் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. நிகழ்ச்சியை நிறுத்தி, ரெக்கார்ட் செய்துகொள்கிறது. எப்பொழுது விழிக்கிறார்களோ, அப்பொழுது விட்ட இடத்திலிருந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியும். யாராவது தூங்கினால், மற்றவர்கள் வேறு நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும். 15 வயது மாணவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கண்டுபிடிப்பு நல்லாதான் இருக்கு, ஆனா டிவி நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரணுமா?

கொலோரோடாவில் ’ஷூட்டர்ஸ்’ என்ற பெயரில் ஓர் உணவு விடுதி இயங்கி வருகிறது. பெயருக்கு ஏற்றார் போல இங்கே வேலை செய்யும் அனைவரும் இடுப்பில், துப்பாக்கியைச் சுமந்துகொண்டு இருக்கிறார்கள். பொது இடங்களில் துப்பாக்கி எடுத்துச் செல்வது குற்றம் என்பதால், உணவு விடுதிக்குள் துப்பாக்கிகளோடு இயங்குகிறார்கள். ‘துப்பாக்கிகள் உங்களை வரவேற்கின்றன. தேவை ஏற்படாத வரை இந்தத் துப்பாக்கிகள் உறைகளில்தான் இருக்கும்’ என்ற வாசகங்களை வேறு வைத்திருக்கிறார்கள். 55 இருக்கைகள் கொண்ட இந்த உணவு விடுதியில் ஒருவருக்கு 4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்கே ஆல்கஹால் வழங்கப்படுவதில்லை. சிறிய நகரத்தில் இருக்கும் இந்த உணவு விடுதிக்கு ஏராளமான பிரச்சினைகள் வருவதால் துப்பாக்கிகளுடன் இயங்குவதாகச் சொல்கிறார் உரிமையாளர்.

ஆயிரம் காரணம் சொன்னாலும் இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x