Published : 28 Jun 2016 10:14 AM
Last Updated : 28 Jun 2016 10:14 AM

உலக மசாலா: சைவ இறைச்சி!

சான்பிரான்சிஸ்கோவில் தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரைத் தயாரித்திருக்கிறார்கள்! உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. நீண்ட காலமாகவே இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் சான்பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது.

கடந்த 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மாட்டு இறைச்சியைப் போன்ற நிறமும் சுவையும் உடைய பொருளை உருவாக்கிவிட்டனர். ’’ஒரு உணவுப் பொருள் புதிதாகக் கண்டுபிடிக்கும்போது, அது உலகத்தையே மாற்றிவிடவேண்டும். அப்படி ஒரு பொருளைத்தான் நாங்கள் தற்போது உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தாவர இறைச்சியைச் சமைக்கும்போது மாட்டு இறைச்சி சமைப்பது போலவே மணம் வரும். பார்க்கவும் கண்களைக் கவரும். சுவையும் அசல் மாட்டு இறைச்சியை ஒத்திருக்கும். பர்கரில் வைத்துச் சுவைத்தவர்கள் தாவர இறைச்சி என்பதை நம்பவில்லை.

அத்தனைத் துல்லியம். நாங்கள் சைவ உணவு மேற்கொள்பவர்களுக்காக இந்தத் தாவர இறைச்சியை உருவாக்கவில்லை. பல கோடி அசைவப் பிரியர்களுக்காகவே இதை உருவாக்கியிருக்கிறோம். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, கோதுமை, உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன்கள் எல்லாம் சேர்ந்து தாவர இறைச்சியைக் கொடுக்கின்றன. இறைச்சியை விட இதில் அதிக அளவில் புரோட்டீனும் குறைந்த அளவு கொழுப்பும் இருக்கின்றன.

அதனால் பயமின்றி இந்தத் தாவர இறைச்சியைச் சாப்பிடலாம். தற்போது இதன் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைந்துவிடும். அடுத்த 50 ஆண்டுகளில் சைவ இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்துவிடும்’’ என்கிறார் பாட்ரிக் ப்ரெளன்.

சைவ இறைச்சி! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!

ஈரானைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சஜாத் காரிபி. 175 கிலோ எடை கொண்ட சஜாத், உலகின் மிகப் பெரிய மனிதராக இருப்பார் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவரது புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், ‘ஈரானியன் ஹல்க்’, ’பெர்சியன் ஹெர்குலிஸ்’ போன்ற பட்டங்களை எல்லாம் அளித்து வருகின்றனர். ’’எனக்கு மற்றவர்கள் சொல்வது போல ஒரு ஹல்க் ஆகவோ, பெர்சியன் ஹெர்குலிஸ் ஆகவோ மாற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது.

நான் பளு தூக்கும் விளையாட்டை மிகவும் நேசிக்கிறேன். அதனால் கடினமாக உடற்பயிற்சி செய்து, உணவுகளைச் சாப்பிட்டு நல்ல நிலையில் உடலை வைத்திருக்கிறேன். ஈரானைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் என்று என்னை உலகம் அடையாளம் காண வேண்டும் என்பதே என் விருப்பம். என்னை இன்ஸ்டாகிராமில் 67 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். என் உருவத்தை வித்தியாசமாகக் காட்டும்போதுதான் நான் பிரம்மாண்ட மானவனாகத் தெரிவேன். அதனால்தான் குளிர்பான பாட்டில் போன்றவற்றை வைத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பேன். இவ்வளவு பெரிய உருவத்தின் கையில் இத்தனைச் சிறிய பாட்டிலா என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்’’ என்கிறார் சஜாத்.

பெர்சிய ஹெர்குலிஸ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x