Published : 17 Apr 2015 10:55 AM
Last Updated : 17 Apr 2015 10:55 AM

உலக மசாலா: சிவப்பி!

இங்கிலாந்தில் வசிக்கும் 17 வயது எமிலி ரேயேவுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இயற்கையாகவே முடி சிவப்பாக மாறிவிட்டது. இசைக் கலைஞராகவும் இருக்கும் எமிலிக்கு இந்தச் சிவப்பு முடி சாதகமாகவே அமைந்துவிட்டது. ஆனால் ட்ரினிடி பள்ளியின் தலைமையாசிரியர் முடியின் நிறத்தை மாற்றினால்தான் வகுப்புக்கு வரலாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

பச்சை, நீலம் போன்ற நிறங்களுடைய முடிகளுக்குப் பள்ளியின் சட்டத்தில் இடமில்லை. இயற்கையாகவே சிவப்பாக மாறிவிட்ட முடிக்கு நான் என்ன செய்வது என்று கேட்கிறார் எமிலி. தலைமையாசிரியர் எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

வகுப்புக்குள் எமிலியால் நுழைய முடியவில்லை. ஆனாலும் முடியைக் கறுப்பாக மாற்றும் திட்டம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது பெற்றோரும் எமிலியின் முடிவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதேபோல தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருக்கிறது.

ஆரம்பத்தில் கோபமாக இருந்த எமிலி, தற்போது பாடங்களைக் கவனிக்க முடியவில்லை என்று கண்ணீர் வடித்து வருகிறார்.

மனிதனுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்துக்காக மனிதன் இல்லை…

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசித்து வருகிறார் யுவான். சமீபத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது செல்போனிலிருந்து வந்த அழைப்புகளுக்கு யுவான் நிலைமை தெரிவிக்கப்பட்டது. வரிசையாகப் பெண்கள் யுவானைத் தேடி மருத்துவமனை வந்தனர். 17 பெண்களும் தான் யுவானின் மனைவி என்று கூறினர்.

40 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள பெண்கள் இதில் அடக்கம். எல்லோரும் ஒன்று கூடியதில் உண்மை வெளிவந்துவிட்டது. ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையில் ஒருவருக்கு ஒருவர் முதலில் சண்டையிட்டுக்கொண்டனர். பிறகு யுவான் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். 17 பெண்களும் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஏராளமான பணத்தைக் கறந்திருக்கிறார் யுவான். ஒருகட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டால், பெரும் பணத்தை வாங்கிக்கொண்டு விவாகரத்து கொடுத்து விடுவார். ஜாமினில் வெளிவந்திருக்கும் யுவானிடமிருந்து பணத்தை வாங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காவல்துறை.

எத்தனுக்கு எத்தன்…

கலிஃபோர்னியாவின் வடக்கு கடற்கரையில் 50 அடி நீளம் கொண்ட ஸ்பெர்ம் திமிங்கிலம் ஒதுங்கியது. திமிங்கிலத்தின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராட்சச திமிங்கிலம் எவ்வாறு இறந்திருக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளில் 17 ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் இறந்து போய், கரை ஒதுங்கியிருக்கின்றன. பாறை போல ஒதுங்கியிருக்கும் திமிங்கிலத்தை நேரில் பார்க்கும் ஆவலில் ஏராளமானவர்கள் வருகின்றனர்.

ஐயோ பாவம்…

பிரிட்டனில் வசிக்கும் 40 வயது புலென்ட் சன்மெஸ்க்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் அவரது இதயம் நின்று போனது. மருத்துவர்கள் பல்வேறு விதங்களில் இதயத்தைத் துடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் பனிக்கட்டி குளியலுக்கு ஏற்பாடு செய்தனர். நின்று போன இதயம் துடிக்க ஆரம்பித்தது.

24 மணி நேரம் இதயத் துடிப்பைக் கண்காணித்து, அவரது உடல் இயல்பான வெப்பநிலைக்குத் திரும்பும் வரை மருத்துவர்கள் அருகிலேயே இருந்தனர். புலென்ட் பிழைத்துவிட்டார். ஆனால் அவரது ஞாபக சக்தி மறைந்துவிட்டது. மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அடையாளம் தெரியவில்லை. மாரடைப்பின்போது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், நினைவு மெதுவாகத் திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். 8 மாதங்களுக்குப் பிறகு தன் மனைவியையும் குழந்தைகளையும் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார் புலென்ட்.

செத்துப் பிழைத்தவர்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x