Published : 29 Apr 2016 10:13 AM
Last Updated : 29 Apr 2016 10:13 AM

உலக மசாலா: குப்பை கொட்டுவதற்குக் கட்டணம்

உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் அதிக அளவில் வீணாகி வருகின்றன. இந்தப் பிரச்சினையைச் சரி செய்வதற்கு தென்கொரிய அரசு ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. பணத்தைச் செலுத்திவிட்டுதான், உணவுப் பொருட்களைக் குப்பையில் கொட்ட வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு கிலோ உணவு குப்பையில் கொட்டுகிறோமோ, அவற்றுக்கு ஏற்றவாறு கட்டணத்தைச் செலுத்தவேண்டும். இதற்காகத் தனித் தனி நவீன குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 3 வழிகளில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடண்டிஃபிகேஷன் கார்டை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருமுறை குப்பைக் கொட்டும்போதும், கார்டைத் தேய்க்க வேண்டும்.

குப்பைத் தொட்டி திறக்கும், எடையைக் காட்டும். மாத இறுதியில் மொத்த பணத்தையும் செலுத்திவிட வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தக் குப்பைத் தொட்டியில் 60 வீடுகளின் உணவுக் கழிவுகளைக் கொட்ட முடியும். இரண்டாவது முறை, பணம் கட்டி குப்பைகளுக்கான பைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பையிலும் எவ்வளவு எடை வரைக்கும் குப்பைகளைக் கொட்ட முடியும் என்று எழுதப்பட்டிருக்கும். 10 லிட்டர் குப்பைகளுக்கான பைகளின் விலை 66 ரூபாய். இந்தப் பைகளை ஒரு தொட்டியில் தனியாகப் போட வேண்டும். மூன்றாவது முறை, பார் கோடு ஸ்டிக்கர்களை வாங்கி பையில் ஒட்டி, உணவுக் கழிவுகளைப் போட்டு மட்கும் குப்பைகளுக்கான தொட்டியில் கொட்ட வேண்டும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் 3 விதமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக உணவுகளை வீணாக்குபவர்கள் அதிக அளவில் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் உணவுப் பொருட்கள் வீணாவது கணிசமாகக் குறைந்து வருகிறது. தென்கொரியாவில் 28 சதவீத உணவுப் பொருட்கள் வீணாகிக்கொண்டிருந்தன. சிறிய உணவகங்களில் 68 சதவீத உணவுகள் வீணாகின. 2008-ம் ஆண்டு 5.1 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாகின, 2014-ம் ஆண்டு 4.82 மில்லியன் டன் உணவுப் பொருட்களாகக் குறைந்துள்ளன.

குப்பை கொட்டுவதற்குக் கட்டணம்… நல்ல திட்டம்!

ஜெர்மன் நகரங்களில் எத்தனையோ போக்குவரத்து சிக்னல்கள் வைக்கப்பட்டிருந்தும் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. ‘’என்ன எச்சரிக்கை வைத்தாலும் மக்கள் நிமிர்ந்து பார்த்தால்தானே? எல்லோரும் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு குனிந்தபடியே செல்கின்றனர். சாலை, வாகனங்கள், மனிதர்கள் என்று எதையும் கவனிப்பதில்லை. வாகனங்கள், ட்ராம் வண்டிகள் மீது அடிக்கடி மோதி, விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்காக எச்சரிக்கும் விதத்தில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பொருத்தினோம். எச்சரிக்கைகள் கொடுத்துக்கொண்டே இருந்தோம். யாரும் அவற்றை எல்லாம் கவனிக்கவில்லை. இவர்களுக்காகவே ஸ்மார்ட் போனில் போக்குவரத்து விதிகளைச் சொல்லும் எச்சரிக்கைகளை அப்ளிகேஷனாக உருவாக்கிவிட்டோம். அருகில் வாகனங்கள் வந்தால், போனில் எச்சரிக்கை வந்து நகர்ந்து சென்றுவிடலாம். இதற்கு ‘ஸ்மாம்பீஸ்’ என்று பெயர்’’ என்கிறார் ஒரு போக்குவரத்து அதிகாரி.

ம்... ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்டது உலகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x