Published : 09 Feb 2016 10:04 AM
Last Updated : 09 Feb 2016 10:04 AM

உலக மசாலா: காற்றில் இருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம்!

காற்றில் இருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனம். ஃபான்டஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கருவி சூரிய சக்தியால் இயங்குகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து தண்ணீரை இழுத்து, வடிகட்டி, சுத்தமான தண்ணீராக பாட்டிலில் சேமிக்கிறது. வியன்னாவைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் ரெடிஸர் இந்தக் கருவியை உருவாக்கியிருக்கிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சோடா பாட்டிலை எடுக்கும்போது அவற்றின் வெளிப்பக்கங்களில் நீர்த்துளிகள் காணப்படும். அந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே காற்றில் இருந்து தண்ணீரைப் பெறும் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார் கிறிஸ்டோஃப். நீண்ட தூரம் நடைப்பயணம் மேற்கொள்பவர்களும் சைக்கிள் பயணம் மேற்கொள்பவர்களும் தண்ணீரைச் சுமந்து திரிய வேண்டியதில்லை, தண்ணீரைத் தேடி அலைய வேண்டியதில்லை. இவர்களுக்காக 2 விதங்களில் ஃபான்டஸ் கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நடந்து செல்பவர்கள் ஃபான்டஸ் கருவியை சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்துகொண்டால், காற்றில் இருக்கும் ஈரப்பதம் தண்ணீராக மாறி, பாட்டிலுக்குள் சேர்ந்துவிடும். சைக்கிளில் செல்பவர்களுக்கு சைக்கிளிலேயே கருவியை இணைத்துக்கொள்ளலாம்.

காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் அதிகம் கிடைக்கும். குளிர்ப் பிரதேசங்களில் இருந்து பாலைவனங்கள் வரை இந்தக் கருவியில் இருந்து தண்ணீர் பெற முடியும். ஒரு மணி நேரத்தில் அரை லிட்டர் தண்ணீர் கிடைக்கும். வெப்பநிலை 86 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்போது 80 முதல் 90 சதவிகித ஈரப்பதம் காற்றில் இருக்கும். அப்பொழுது ஒரு நிமிடத்துக்கு 30 சொட்டுகள் வீதம் ஒரு மணி நேரத்தில் அரை பாட்டில் தண்ணீர் கிடைக்கும். இந்தத் தண்ணீர் தூசி, பூச்சிகளை வடிகட்டிவிடும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக இருக்காது. சுத்தமான காற்றாக இருந்தால் தாராளமாகக் குடித்துவிடலாம். இதற்காகவே கார்பன் ஃபில்டர்களைப் பொருத்தும் திட்டமும் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது.

காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்து, குடி தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் ஃபான்டஸ் கருவி மிகவும் உதவியாக இருக்கும். ஃபான்டஸ் கருவியைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிதியைத் திரட்டி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது ஃபான்டஸ். ஒரு கருவியின் விலை 6,800 ரூபாய்.

உலகில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் நாள் வெகு தொலைவில் இல்லை!

உகாண்டாவின் குயின் எலிசபெத் நேஷனல் பார்க்கில் இரண்டு புகைப்படக்காரர்கள் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் வெள்ளை மீன்கொத்தி கேமராவில் சிக்கியது. பொதுவாக மீன்கொத்திகள் கண்கவர் வண்ணங்களைக் கொண்ட பறவைகளாகவே இருக்கின்றன. மரம், செடிகளுக்கு இடையே அமரும்போது சட்டென்று கண்களுக்குப் புலப்படுவதில்லை. மீன்கொத்திகளில் 90 வகைகள் இருக்கின்றன. எல்லா மீன்கொத்திகளும் பெரிய தலையுடனும் கூர்மையான நீண்ட அலகுடனும் கண்கவர் வண்ணங்களுடனும் காட்சியளிக்கின்றன. மிக அரிதாகவே வெள்ளை மீன்கொத்திகள் பார்வைக்கு வருகின்றன.

அட! வெள்ளை மீன்கொத்தியும் அட்டகாசமாகத்தான் இருக்கு!

நைஜீரியாவில் வசிக்கும் 24 வயது ஹனீஃபா ஆடம், ‘ஹிஜார்பி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் விதவிதமான பார்பி பொம்மைகளின் படங்களை வெளியிட்டு வருகிறார். இங்கே வெளியிடப்படும் பார்பி பொம்மைகள் அனைத்தும் ஹிஜாப் அணிந்திருக்கின்றன. அதாவது ஹனீஃபாவைப் போலவே ஆடைகளும் ஹிஜாபும் அணிந்துள்ளன. அதனால் இந்தப் பொம்மைகளுக்கு ‘ஹிஜார்பி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். ’’முஸ்லிம் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பார்பி பொம்மைகள் இல்லை. பார்பி பொம்மைகளை எங்கள் கலாசாரத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டேன். பாராட்டுகள் குவிகின்றன. எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. ஹிஜாப் என்பது எங்களுக்கான பிரத்யேக அடையாளம். அதை வைத்து பார்பி பொம்மைகளை உருவாக்கியதில் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. பார்பி பொம்மைகளை இறக்குமதி செய்து, ஹிஜார்பி பொம்மைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறேன்’’ என்கிறார் ஹனீஃபா.

இந்திய பார்பிகள் கூட பாவாடை, தாவணி, சேலை எல்லாம் கட்டுகின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x