Published : 31 Aug 2016 09:23 AM
Last Updated : 31 Aug 2016 09:23 AM

உலக மசாலா: இப்படியா ஒரு மனுஷியை நடத்துவது?

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் சோசியல் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேஷன், ஓய்வு பெற்ற முதியோர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையை அளித்து வருகிறது. இதற்காக ஏற்கெனவே அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை வரியாகப் பெற்றுக்கொண்டு விடுகிறது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த பார்பரா மர்பி 64 வயதில் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் அரசாங்கக் குறிப்பு 2014-ம் ஆண்டே பார்பரா இறந்துவிட்டார் என்கிறது.

அதனால் 2 ஆண்டுகளாக அவருக்குச் சேர வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் தர மறுக்கிறது. ‘2 வாரங்களுக்கு முன்பு என் பேத்தியுடன் உணவு விடுதிக்குச் சென்றேன். கடன் அட்டையைக் கொடுத்தேன். அதில் பணம் இல்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர். என் பேத்தி வங்கியில் பணி புரிகிறார். உடனே வங்கியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சோசியல் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் அறிவுறுத்தலின்படி பார்பரா இறந்து விட்டதால், அவரது கணக்கை முடக்கிவிட்டதாகச் சொன்னார்கள். நான் உயிருடன் இருப்பதாக என் பேத்தி சொன்னார்.

உடனே சோசியல் செக்யூரிட்டியைத் தொடர்புகொள்ளச் சொன்னார்கள். மறுநாளே சோசியல் செக்யூரிட்டி அலுவலகம் சென்றோம். அங்கே என்னுடைய எண் தவறு என்று வந்தது. ஒரு அதிகாரியைச் சந்தித்தோம். நான் இறந்து விட்டதாகச் சான்றிதழைக் காட்டினார். நான் மறுத்தேன். நீண்ட விசாரணை. நூற்றுக்கணக்கான கேள்விகள். பொறுமையாகப் பதில்களைச் சொன்னேன். இறுதியில் ஒரு கடிதம் எழுதி, வாங்கிக்கொண்டார்கள். விரைவில் என்னுடைய கணக்கை இயங்க வைப்பதாகச் சொன்னார்கள். 2 ஆண்டுகளாக எனக்கு வந்து சேரவேண்டிய மருத்துவச் செலவுகளுக்கான தொகையைப் பெறுவதற்கு ஒவ்வொரு மருத்துவராக நாடி வருகிறேன்.

இதற்கிடையில் இறப்புச் சான்றிதழை மாற்றும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. இந்த அமைப்பு முறையை என்னவென்று சொல்வது? இறப்பதை விடக் கொடுமையாக இருக்கிறது உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக நடத்துவது. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். இறந்த பின்னரும் நடமாடும் பெண் என்று என்னை இந்த உலகம் அழைக்கட்டும்’ என்கிறார் விரக்தியுடன் பார்பரா.

அடப்பாவிகளா… இப்படியா ஒரு மனுஷியை நடத்துவது?

சீனாவின் வெய்ஃபாங் பகுதிக்கு வேலை தேடி வந்தார் லியு. அவரின் பக்கத்து வீட்டில் ஒருவர், நடுத்தர வயது பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். அது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி என்று லியுவுக்குத் தெரியவில்லை. தன் ஸ்மார்ட்போனில் படங்கள் எடுத்தார். அதைப் பார்த்தும் அங்கிருந்த ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் படங்களை வெளியிட்டார் லியு. படங்கள் சற்று மோசமாக இருந்ததால், அவருக்குப் பயம் வந்தது. ஏன் படங்களைப் போட்டாய் என்று யாராவது கேட்டால் என்ன செய்வது? தேவை இல்லாமல் இப்படி மாட்டிக்கொண்டோமே என்று வருந்தினார்.

இறுதியில் அந்தப் பகுதியில் இருந்த இண்டர்நெட் ஜங்சன் பாக்ஸை உடைத்துச் சேதப்படுத்தினார். 10 லட்சம் ரூபாய்க்கு நஷ்டம். விரைவில் சீனக் காவலர்களால் கைது செய்யப்பட்டார் லியு. விசாரணையில், ‘’இண்டர்நெட் இணைப்புகளைச் சேதப்படுத்தினால், அக்கம்பக்கத்தினர் நான் பகிர்ந்த படங்களைப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தில் இப்படிச் செய்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் லியு. காவல்துறை லியுவின் ஃபேஸ்புக்கை ஆராய்ந்தபோது அந்தப் படங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது தெரிய வந்தது!

வேண்டாத வேலை செய்தால் இப்படித்தான் மாட்டிக்கணும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x