Published : 19 May 2017 11:13 AM
Last Updated : 19 May 2017 11:13 AM

உலக மசாலா: ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா!

சீனாவின் வேய்ஃபாங் நகரின் பைலாங் நதி மீதுள்ள பாலத்தில் அமைந்திருக்கிறது மிகப் பெரிய ஃபெர்ரி சக்கரம். இதில் 36 கூண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூண்டிலும் 10 பேர் அமர முடியும். இந்த கூண்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி, வைஃபை, செல்ஃபி எடுப்பதற்கான வசதிகள் உள்ளன. 475 அடி உயரமுள்ள இந்தச் சக்கரத்தில் அமர்ந்து, ஒருமுறை சுற்றி வருவதற்கு 28 நிமிடங்களாகின்றன. சக்கரம் மெதுவாகச் சுற்றும். நான்கு புறமும் நகரின் அழகை பறவை கோணத்தில் பார்த்து ரசிக்கலாம். புகைப்படங்கள், செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். அரை மணி நேரத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான அனுபவம் கிடைத்துவிடும். 4,600 டன் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட சக்கரம், விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட இருக்கிறது. பொறியியல் வல்லுநர்களின் அபாரமான திறமைக்கு சான்றாக இது கருதப்படுகிறது.

ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் ஸ்டெபானி ஹிஸ்டியின் பூனை, சாதாரண பூனைகளைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கிறது. 3.9 அடி நீளமும் 14 கிலோ எடையுமாக உலகின் மிகப்பெரிய பூனை என்ற சாதனையைப் படைக்க இருக்கிறது. “ஒமர் என்னிடம் வரும்போது, மிகச் சிறியப் பூனையாக இருந்தது. சில மாதங்களில் மிக வேகமாக வளர ஆரம்பித்தது. அதிகபட்சம் 9 கிலோ வரை செல்லும் என்று நினைத்தேன். ஆனால் மூன்று வயதுக்குள் 14 கிலோவை எட்டிவிட்டது. மற்ற பூனைகளைப் போல ஒமரை எளிதாக வெளியில் அழைத்துச் செல்ல முடியாது. பூனைக்காக வாங்கப்பட்ட மர வீட்டில் ஒமரால் நுழைய முடியவில்லை. நாய்க்கான வீட்டை வாங்கி இருக்கிறேன். பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும் ஒமர் மிகவும் அமைதி யானது. சொல்வதைச் செய்யக்கூடியது. கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்” என்கிறார் ஸ்டெஃபானி.

மிக நீளமான பூனை!

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த பால் சான்யான்கோர் என்ற மத போதகர், தன்னிடம் இறைவனின் தொலைபேசி எண் இருப்பதாகக் கூறி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். “இறைவனின் நேரடியான தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலும் சந்தேகப்படுகிறார்கள். நான் கடவுளிடம் தொலைபேசி எண் இருக்கும் என்று நம்பினேன். மனம் உருகப் பிரார்த்தனை செய்தேன். அந்த நம்பிக்கைக்குப் பரிசாக அவருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறார். தேவைப்படும்போது அவரைத் தொடர்புகொள்கிறேன். அவர் இடும் கட்டளைகளைக் கேட்டு, மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். எங்கள் தேவாலய தொலைக்காட்சி மூலம் ‘ஹெவன் ஆன்லைன்’ நிகழ்ச்சியில் இறைவனை தொலைபேசியில் அழைப்பேன். இந்த எண்ணை மற்றவர்களுக்கு தர இறைவனின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் என்னால் தர முடியாது. அதுவரை மக்களுக்கு தேவையான விஷயங்களைக் கேட்டு, இறைவனுக்குத் தெரிவிப்பேன். அவர் சொல்லும் தீர்வுகளைப் பெற்று மக்களிடம் அளிப்பேன்” என்கிறார் பால் சான்யான்கோர்.

என்ன சொல்வது!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x