Published : 25 Oct 2016 10:19 AM
Last Updated : 25 Oct 2016 10:19 AM

உலக மசாலா: அரை டன் எடையுடன் தவிக்கும் இமான்

எகிப்தில் வசிக்கும் இமான் அஹ்மது அப்துலாட்டி, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை. அவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாது.

உலகிலேயே அதிக அடை கொண்ட பெண் இமான் அப்து லாட்டிதான். 500 கிலோ எடையுடன் இருக்கிறர். சிறிய வயதிலேயே அரிய குறைபாட்டால் பாதிக்கப் பட்ட இமான், விரைவிலேயே படுக்கையில் முடங்கிப் போனார்.

“இமான் பிறந்த தில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாள். யானைக்கால் நோய், நோய்த் தொற்று, சுரப்பிகள் சரிவர இயங்கவில்லை என்று அடுத்தடுத்து பாதிப்புகளால் தாக்கப்பட்டாள். உடல் எடை அதிகமாகிக்கொண்டே வந்தது. 11 வயதில் காலை எடுத்து வைக்க முடியாத அளவுக்கு நோய் முற்றிவிட்டது. கொஞ்சம் நாள் தவழ்ந்தாள். பிறகு படுக்கையில் விழுந்தாள். அதீத எடையால் இமானால் புரண்டு படுக்கக்கூட முடியாது. சிலை போல அப்படியே படுத்திருப்பது மிகவும் கொடுமையானது. சாப்பிடுவது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது எல்லாமே படுக்கையில்தான். உடலைச் சுத்தம் செய்வதோ, ஆடை அணிவிப்பதோ மிகவும் சிரமம். ஒருவரால் எதையும் செய்ய முடியாது.

என் மனைவியும் இன்னொரு மகளும் இமானை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். உடல் இன்னும் பலூன் போல பெரிதாகிக்கொண்டேதான் வருகிறது. என் மகளுக்கு மருத்துவ உதவி கேட்டு, அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். கெய்ரோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவம் செய்தால், என் மகள் பிழைத்துவிடுவாள் என்று நம்புகிறேன்” என்கிறார் இமானின் தந்தை.

அரை டன் எடையுடன் தவிக்கும் இமானுக்கு விரைவில் மருத்துவ உதவி கிடைக்கட்டும்…

உலகிலேயே மிக அழகான மாடல் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது டீ. இது ஆப்கன் ஹவுண்ட் வகையைச் சேர்ந்த நாய். நல்ல உயரமும் மெல்லிய உடலும் பட்டு போன்ற கருங்கூந்தலுமாக இருக்கிறது.

சிட்னியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஒரே இரவில் டீயின் புகைப்படம் இணையத்தில் 10 லட்சம் தடவைக்கு மேல் பகிரப்பட்டிருக்கிறது. நாய்களுக்கான உணவுகள், நாய்களுக்கான வாசனைத் திரவியங்களுக்கு டீயை மாடலாக சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. “டீ இந்த வரவேற்பைப் பெற்றதில் எங்களுக்கு வியப்பில்லை. அத்தனைப் புகழுக்கும் தகுதியானவள். எங்கே அழைத்துச் சென்றாலும் கூட்டம் கூடிவிடும். அவளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள். டீ விலங்கு நடிகராக மாறிவிட்டாள். பலரும் தங்கள் பொருட்களுக்கு டீயை மாடலாக நடிக்கும்படி கேட்கிறார்கள். எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டால் பணம் வரும்தான். ஆனால் ஒப்புக்கொண்ட விளம்பரங்களில் மட்டுமே டீ நடிப்பாள். இனி அவளைக் கண்காட்சிகளிலோ, விளம்பரங்களிலோ பங்கேற்க வைக்கும் எண்ணம் இல்லை. அவளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழட்டும் என்று முடிவு செய்துவிட்டேன். டீ இதுவரை எங்களுக்குக் கொடுத்த மறக்க முடியாத அற்புதமான தருணங்களே வாழ்நாளுக்கும் போதும்” என்கிறார் உரிமையாளர் லூக் கவனா.

உலகின் சூப்பர் மாடல்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x