Published : 22 May 2017 05:18 PM
Last Updated : 22 May 2017 05:18 PM

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீரா மாற்றம்: அதிபர் சிறிசேனாவின் முதல் அமைச்சரவை மாற்றம்

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீரா, நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நிதி துறையை கவனித்து வந்த ரவி கருணாநாயகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போருக்கு பிந்தைய நாட்களில் சர்வதேச அளவில் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தி, இலங்கை அரசுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தியவராக பார்க்கப்பட்ட மங்கள் சமரவீரா அந்த பொறுப்பிலிருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

60 வயதான சமரவீரா மீது சமீப வாரங்களாகவே எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையில், நாட்டின் நலனுக்கு எதிரான முடிவுகளை சமரவீரா எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

இந்திய மீனவர்கள் மீதி இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து நியாயப்படுத்தி வந்த சமரவீரா, பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் படகுகளை திரும்ப தர மாட்டோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமரவீரா நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சராக இருந்த ரவி கருணா நாயகே மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. வரிச் சீர்திருத்தத்தில் போதுமான முன் முடிவுகளை யோசிக்காமல் திட்டங்களை தீட்டியதாக ஆளும் தரப்பிலேயே கருணா நாயகே மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. இந்நிலையில் ரவி கருணா நாயகே புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகம் மற்றும் கப்பல் துறை கவனித்து வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூனா ரனதுங்கேவையும் அந்த துறையிலிருந்து மாற்றி பெட்ரோலிய துறை அமைச்சராக நியமித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.நாளைய தினம் மேலும் பல அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்று இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x