Last Updated : 31 Aug, 2016 04:03 PM

 

Published : 31 Aug 2016 04:03 PM
Last Updated : 31 Aug 2016 04:03 PM

இந்தியா – அமெரிக்க ராணுவ உடன்பாட்டால் சீனா அச்சமடைய தேவையில்லை: ஜான் கிர்பி பேட்டி

இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவத் தளவாடங்கள் பகிர்வு ஒப்பந்தத்தால் சீனா அச்சம் அடையத் தேவையில்லை என்று அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலான இந்த முக்கிய ஒப்பந்தம் வாஷிங்டனில் செவ்வாயன்று கையெழுத்தானது.

இருநாட்டு ராணுவங்களும் ஒருவர் மற்றவருடைய ராணுவத் தளங்களையும் தளவாடங்களையும் பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சி என்று சீனா கூறியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்துக்கு சீனாவின் கவலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஜான் கிர்பி கூறியதாவது: இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவத் தளவாடங்கள் பகிர்வு ஒப்பந்தத்தால் இரு நாடுகள் இடையே ஆழமான, வலுவான, மிகுந்த ஒத்துழைப்புடன் கூடிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் யாரும் கவலை அடையத் தேவையில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக நாடுகள். உலக அரங்கில் இரு நாடுகளுக்கும் வியத்தகு வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் எங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை அளிப்பது மட்டுமின்றி, எங்கள் பிராந்தியத்துக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும்.

இந்தியா – அமெரிக்கா இடையே ஏற்கெனவே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவுகிறது. இவை பொருளாதாரம், வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்புடையவை. தற்போது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது இருதரப்பு உறவை முழுமை அடையச் செய்துள்ளது.

இவ்வாறு ஜார் கிர்பி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x