Published : 23 Jul 2014 03:24 PM
Last Updated : 23 Jul 2014 03:24 PM

அரசை விமர்சனம் செய்தவரை வதந்தி பரப்புகிறார் என்று சிறையில் தள்ளிய சீனா

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கடும் விமர்சனங்களை தனது வலைத்தளத்தில் வைத்த நபர் வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

டாங் ரூபின் என்ற அந்த நபர் ஒரு வர்த்தகர். இவரது வலைப்பதிவுக்கு சுமார் 50,000 வாசகர்கள் உள்ளனர். தென்மேற்கு மாகாணமான யுனனில் இவர் போலீஸ் அராஜகம் முதல் ஊழல் உள்ளிட்ட பல அரசுக்கு எதிரான விஷயங்களை தனது இணையத்தில் அம்பலப்படுத்தினார்.

இவர் மீது தொடரப்பட்ட வழக்கு வுஹுவா மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவர் சட்டவிரோத வர்த்தகம் செய்வதாகவும், பொருளாதார லாபத்திற்காக வதந்திகளைப் பரப்புவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டு 6.5 ஆண்டுகள் சிறையில் செலவழிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாங் ரூபினின் இணயதள ஆலோசனை நிறுவனத்தின் பொதுமேலாளர் ஹூ பெங்கிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெரும் தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு 24 வயது லீ கியோமிங் என்பவரது வழக்கு ஒன்றில் இவர் அம்பலப்படுத்திய உண்மைகள் சீனாவைக் கலக்கியது. லீ கியோமிங் என்ற அந்த நபர் சிறையில் கடுமையான மூளைக் காயங்களினால் மரணமடைந்தார்.

இது குறித்து சிறை அதிகாரிகள் கூறியது என்னவெனில், அவர் சக கைதிகளுடன் ஒளிந்துப் பிடித்து விளையாடும் போது உயிரிழந்தார் என்று கூறினர். ஆனால் டாங் ரூபின் கடுமையாக அதனை மறுத்து தனது வலைப்பதிவில் எழுதிய விஷயங்கள் ஆன்லைனில் கடும் கோபாவேசங்களை எழுப்பியது. இதனையடுத்து சீன அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணையில் சக கைதிகள் அவரை அடித்துக் கொன்றதாகக் கூறப்பட்டது. ஆனால் நீக்கப்பட்டதோ மூன்று அதிகாரிகள்.

கடந்த ஆண்டு யுனன் மாகாணத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலை ஒன்றைத் திறப்பதை டாங் கடுமையாக எதிர்த்தார். இவரது எழுத்தினால் சுமார் 1000 பேர் தெருக்களில் இறங்கி ஆலைக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அந்த ஆலை வந்தால் அது நச்சு ரசாயனத்தை உற்பத்தி செய்யும் என்பதே போராட்டத்திற்குக் காரணம்.

இவரது எழுத்துக்களினால் தேசமே எழுச்சியடைவதைக் கண்ட சீன அரசு இணையதளத்திற்கென கடுமையான சென்சார் விதிமுறைகளைக் கொண்டு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x