Published : 21 Aug 2014 11:15 AM
Last Updated : 21 Aug 2014 11:15 AM

அமெரிக்க பத்திரிகையாளர் தலையை துண்டித்தது பிரிட்டிஷ் ஜிகாதியா?- ஆய்வில் பரபரப்பு தகவல்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை தலையை துண்டித்து கொலை செய்தது பிரிட்டனைச் சேர்ந்த ஜிஹாதியாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தகவல் வெளியாகி இருக்கிறது.

கிளர்ச்சியாளரின் அடையாளம்!

ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்த கிளர்ச்சியாளரின் அடையாளத்தை விசாரணை அதிகாரிகள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீண்ட ஒருவர் அளித்த தகவலின்படி, தன்னை ஜான் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோவில் உள்ள அந்த கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிகாதிகளின் ரிங் லீடர் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க உளவு நிறுவனமான எக்.பி.ஐ-யுடன் இணைந்து பிரிட்டனின் எம்-15 புலனாய்வு நிறுவனமும், ஸ்காட்லாந்து நிறுவன போலீசாரும் போலே தலையை துண்டிக்கும் கிளர்ச்சியாளர் அடையாளத்தை காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக 'தி கார்டியன்' செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில்தான், கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிஹாதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சிரியாவில் கடத்தப்படும் வெளிநாட்டவர்களின் உறவினர்களுடன் இணையம் வாயிலாக ஜான் என்ற கிளர்ச்சியாளரே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே வீடியோவில் இடம்பெற்றுள்ள ஜான் என்பவரும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் ஜான் என்பவரும் ஒரே நபராக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

லண்டன் ஆங்கில உச்சரிப்பு

இதற்கிடையில், மொழியியல் வல்லுநர்கள் சிலர் ஜேம்ஸ் போலே வீடியோவை ஆய்வு செய்துவிட்டு கிளர்ச்சியாளர்கள் பேசுவது லண்டன் ஆங்கில உச்சரிப்பு என தெரிவித்துள்ளனர்.

இது புலன்விசாரணை அமைப்புகளின் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது குறித்து லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர் கிளேர் ஹர்டகர் கூறுகையில்: "வீடியோவில் பேசிய நபரின் உச்சரிப்பு லண்டன் ஆங்கிலம்தான். அதுவும் குறிப்பாக கெண்ட், எசெக்ஸ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பேசும் உச்சரிப்பை ஒத்து இருக்கிறது" என்றார்.

பிணை கைதியின் தலை துண்டிப்பு வீடியோ பதிவிற்கு முதல் முறையாக ஆங்கிலம் பேசும் கிளர்ச்சியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளாக உள்ள மேற்கத்திய நாடுகளுக்கும் மேலும் வலுவாக தனது எச்சரிக்கையை பதிவு செய்வதற்காகவே என கூறப்படுகிறது.

பிரிட்டனில் பிறந்த 500-க்கு மேற்பட்டோர் ஜிஹாத்திகளாக உருமாறி சிரியா, இராக் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மிரட்டல்:

அமெரிக்க பத்திரிகையாளர் போலேவை கொலை செய்யப்போவதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்ததாக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரது தலையை துண்டித்து கொலை செய்யும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

அதில், இராக்கில் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதை அடுத்து அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே தலையை துண்டித்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த வீடியோவின் நம்பக்த்தன்மையை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து குளோபல் போஸ்ட் சி.இ.ஓ பிலிப் பல்போனி கூறுகையில்: ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போலேவில் குடும்பத்தாருக்கு கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் கடிதத்தை அனுப்பிவிட்டனர். அந்த மின்னஞ்சல் முழுவதும் வெறுப்பே நிறைந்திருந்தது. கிளர்ச்சியாளர்கள் வேறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

இ மெயில் கிடைக்கப்பெற்ற பிறகு, போலேவை பத்திரமாக மீட்க எங்கள் நிறுவனம் கடும் முயற்சியை மேற்கொண்டது. போலேவை மீட்டுத்தருமாறு சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்திடம் கோரப்பட்டது. இதற்காக பல மில்லியன் டாலர் பணம் செலவழிக்கப்பட்டது என்றார்.

2012-ல் கடத்தப்பட்டார்:

சிரியாவில் உள்நாட்டுப் போரின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஜேம்ஸை 2012-ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜேம்ஸ் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு செய்தி என்ற தலைப்பிடப் பட்டுள்ள அந்த வீடியோவில் பாலைவனப் பகுதியில் ஜேம்ஸ் முழங்காலிட்டு நிற்கின்றார். அவருக்குப் பின்னால் முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர் ஒருவர் கத்தியுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க அரசுக்கும், தனது குடும்பத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்து ஜேம்ஸ் உருக்கமாக பேசுகிறார். பின்னர் அந்த கிளர்ச்சியாளர் ஜேம்ஸின் தலையை கொடூரமான முறையில் துண்டிக்கிறார். அவர் பிணமாக கீழே சாயும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x