Published : 26 Feb 2017 12:26 PM
Last Updated : 26 Feb 2017 12:26 PM

அன்று நட்சத்திர இன்ஜினீயர் இன்று கூகுளின் முதல் எதிரி: தானியங்கி கார் தொழில்நுட்பத்தை திருடியதாக வழக்கு

கடந்த 2013-ம் ஆண்டில் கூகுளின் தானியங்கி கார் திட்டத்தின் நட்சத்திர இன்ஜினீயராக அந் தோனி லெவன்டோஸ்கி போற்றப் பட்டார். இப்போது அவரே கூகுளில் முதல் எதிரியாக தூற்றப்படுகிறார்.

அல்பாபெட் (கூகுளின் புதிய பெயர்) நிறுவனத்தின் தானியங்கி கார் திட்டத்துக்காக 8 ஆண்டு களுக்கு முன்பு வேமோ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத் தின் மூத்த இன்ஜினீயர்களில் ஒருவராக நியூயார்க் நகரைச் சேர்ந்த அந்தோனி லெவன்டோஸ்கி பணியாற்றினார்.

ஓட்டுநர் இல்லாமல் கார் ஓடுமா என்று பலரும் கேலி பேசிய நிலையில் ஓடும் என்று அவர் நிரூபித்து காட்டினார். அவரது வழிகாட்டுதலில் கடந்த 2015-ம் ஆண்டில் வேமோ நிறுவனத்தின் தானியங்கி கார் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

கடந்த 2016 ஜனவரியில் அல்பா பெட்டில் இருந்து விலகிய அந்தோனி, ஓட்டோ என்ற பெயரில் தானியங்கி டிரக் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். கடந்த ஆண்டு உபேர் நிறுவனம் ரூ.4,529 கோடிக்கு ஓட்டோ நிறு வனத்தை கையகப்படுத்தியது. தற்போது உபேர் நிறுவன தானி யங்கி கார் திட்டத்தின் மூத்த இன்ஜினீயராக அந்தோனி லெவன் டோஸ்கி பணியாற்றி வருகிறார்.

இந்தப் பின்னணியில் உபேரின் துணை நிறுவனமான ஓட்டோ மீது அல்பாபெட் நிறுவனம் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில், வேமோ நிறுவன தானியங்கி கார் திட்ட தொழில்நுட்பம் தொடர்பான 14,000 பக்க ரகசிய ஆவணங்களை அந்தோனி லெவன்டோஸ்கி திருடி யிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக வேமோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக் கையில், உபேர் நிறுவனத்துடன் எங்களுக்கு நெருங்கிய வர்த்தக தொடர்பு உள்ளது. எனினும் எங்களது தொழில்நுட்பம் திருடப் பட்டிருப்பதால் வேறு வழியின்றி அந்த நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்களது தானியங்கி கார் தொழில்நுட்பத்தையே உபேர் தானியங்கி கார் திட்டத்துக்கு அந்தோனி லெவன்டோஸ்கி பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

அறிவியல், இலக்கியம், கலை என பல்வேறு துறைகளில் மனிதனால் உருவாக்கப்படும் படைப்புகள் அதனை படைத்தவருக்கே சொந்தம் என்பதை உறுதி செய்வதே அறிவுசார் சொத்துரிமை ஆகும். இது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தொழில் துறை சார்ந்த கண்டுபிடிப்புகள், குறியீடுகள், வடிவமைப்புகள் முதல் வகையாகும். இலக்கியம் சார்ந்த கதை, கவிதை, நாடகம், திரைப்படம், ரேடியோ-தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, ஓவியம், சிற்பம், புகைப்படம் உள்ளிட்டவை இரண்டாம் வகையாகும். அமெரிக்காவை பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை சட்டங்கள் மிகவும் வலுவாக உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வடிவமைப்பை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் ரூ.800 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x