Published : 22 May 2017 04:33 PM
Last Updated : 22 May 2017 04:33 PM

அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை இணைய விடமாட்டோம்: சீனா திட்டவட்டம்

அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைவதை ஏற்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நிலையில் இந்தியா அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழுவில் இணைவதை சீனா அனுமதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீன அரசின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவாய் சுன்யங் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

"அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டையும் அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழுவில் சேர்ப்பதில்லை என்கிற சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2016-ம் ஆண்டு நடைபெற்ற அணு எரிபொருள் விநியோக நாடுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே இந்தியா நுழைவதை சீனா எதிர்க்கிறது. இதில் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்"

48 நாடுகளைக் கொண்ட அணு எரிபொருள் விநியோக நாடுகள் குழுவின் இந்த ஆண்டுக்கான கூட்டம் ஜூன் மாதம் ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது அணு எரிபொருள் நாடுகள் குழுவில் இணைவதற்கான விண்ணப்பத்தை சில நாடுகளின் ஆதரவுடன் இந்தியா பதிவு செய்ய இருக்கிறது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சியை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

அணு எரிபொருள் நாடுகள் குழு என்பது அணு தொழில்நுட்பத்தை நாடுகள் பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்கவும், அணு சக்தி தவறான வழிகளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

















FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x