Published : 11 Jul 2018 08:03 AM
Last Updated : 11 Jul 2018 08:03 AM

உலக மசாலா: அசாதாரண மனிதர்!

இயற்கைக் காட்சிகள், எளிய மனிதர்கள், நவீன மாடல்களின் ஒளிப்படங் களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போகிறார்கள். எடுக்கப் பட்ட விதமும் அபாரமான கற்பனையும் இந்த ஒளிப் படங்களை எடுத்தவர் யார் என்று கேட்க வைத்துவிடுகிறது. இந்தோனேஷி யாவைச் சேர்ந்த 25 வயது அச்மத் ஜுல்கர்னைனைப் பார்ப்பவர்கள் ஒரு நொடி அதிர்ச்சியிலிருந்து மீள்வார்கள். பிறக்கும்போதே இவருக்குக் கால்களும் முழங்கைக்குக் கீழ் கைகளும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் பிறரின் உதவியை எதிர்பார்க்கும் நிலை. குழந்தையாக இருந்தபோது பெற்றோருக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வளர ஆரம்பித்தபோது சிரமத்தைப் புரிந்துகொண்டு, தானே தன்னுடைய வேலைகளைச் செய்யப் பழகிக்கொண்டார். இடுப்புக்குக் கீழே அரையடி கால்கள் மூலம் நடக்கவும் முழங்கைகளைப் பயன்படுத்தி பொருட்களை எடுக்கவும் ஆரம்பித்தார். சவாலான வாழ்க்கையாக இருந்தாலும் படிப்பில் கவனத்தைச் செலுத்தினார். ஒருநாள் இண்டர்நெட் கபேயில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தபோது, கேமரா குறித்துப் பேச்சு வந்தது. கேமரா அவரை இருகரம் நீட்டி அழைத்தது. அவரது கிராமத்துக்கு அடையாள அட்டைக்காகப் படம் எடுக்க அரசாங்க அலுவலர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தபோதுதான் முதல் முறை கேமராவைத் தொட்டார். அந்த நொடியிலிருந்து கேமரா மீதான ஆர்வம் அதிகரித்தது. கடன் பெற்று ஒரு கேமரா வாங்கினார்.

முதலில் கேமராவைக் கையாள்வதற்குப் பயிற்சி எடுத்தார். முழங்கைகளால் எடுத்து, ஒரு கை மீது கேமராவை வைத்து, வாயால் பட்டன்களை அழுத்திப் படங்களைப் பிடித்தார். பிறகு மற்றவர்களை விடத் தன்னுடைய படங்களை எப்படி வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும் என்று யோசித்தார். கற்பனைகளை விரிவாக்கினார். ஒவ்வொன்றையும் செயல்படுத்திப் பார்த்தார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பமும் ஒளிப்படத்தை மெருகூட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், எடிட்டிங், ரீடச் வேலைகளையும் கற்றுக்கொண்டார். தனக்கான ஒரு வாகனத்தை, நண்பர்களின் உதவியோடு உருவாக்கிக்கொண்டார். பிறரின் உதவியின்றி, இந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு எங்கும் சென்று வந்துவிடுகிறார்.

“கேமராதான் என்னைத் துயரத்தில் இருந்து மீட்டது. தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாற்றியது. கற்பனை வளத்தைப் பெருக்கியது. மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்தது. முதல்முறை என்னைப் பார்ப்பவர்களுக்கு என் திறமை மீது நம்பிக்கை வராது. அதனால் என்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்த விரும்பியதில்லை. என் படங்களைக் காட்டிதான், ஒரு ப்ராஜக்ட்டை எடுத்துக் கொள்வேன். என்னுடைய படைப்பு பேசப்படும்பவரை கொஞ்சம் போராட்டம் இருந்தது. அதற்குப் பிறகு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இப்போது ஒருவரும் என் உருவத்தைக் கண்டு என் திறமையைக் குறைவாக மதிப்பிடுவதில்லை. நான் மாற்றுத்திறனாளிதான். ஆனால் குறைபாடு கொண்டவன் அல்ல என்பதை அவர்களே எனக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். என்னை முன்னேற்றிக்கொள்வதற்கோ, என் கற்பனைகளுக்கோ நான் வரையறை வைத்துக்கொள்வதில்லை” என்கிறார் அச்மத். இன்று புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞராகவும் ஒளிப்படக் கலையைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார். பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுவருகிறார்.

அசாதாரண மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x