Published : 07 Jul 2018 10:19 PM
Last Updated : 07 Jul 2018 10:19 PM

உலக மசாலா: ஓய்வில்லாப் போராளி!

மெரிக்காவில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சுதந்திர தேவி சிலையைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அன்றும் வந்திருந்தனர். அமெரிக்க அதிபரின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து இங்கே போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கோ நாட்டைச் சேர்ந்த 44 வயது தெரஸ் ஓகோவ்மவ் என்ற பெண், ‘ட்ரம்ப் அமெரிக்காவை நோயாக மாற்றுகிறார்’ என்ற வாசகத்தை அணிந்த டி சர்ட்டுடன் போராட்டத்தில் பங்கேற்றார். திடீரென்று 89 அடி உயரமுள்ள சுதந்திர தேவி சிலை மீது எப்படியோ ஏறிவிட்டார். அவரைக் கீழே இறங்குமாறு காவல் துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். “சட்ட விரோதமாகக் குடியேறியதாகச் சொல்லி பிரித்து வைத்திருக்கும் அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோரிடம் சேர்த்தால்தான் இந்த இடத்தை விட்டு இறங்குவேன்” என்றார் தெரஸ். இறுதியில் மீட்புக் குழுவினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். “நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்தேன். உடல் பயிற்சியாளராக வேலை செய்கிறேன். ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து எனக்கு ஓய்வே இல்லை. எங்கெல்லாம் அவரை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் நானும் கலந்து கொள்வேன். ஒவ்வொரு வாரமும் போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குக் கூடச் சென்று வந்திருக்கிறேன். அரசாங்கம் தவறு செய்யும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிகப் பெரிய குற்றம். அதனால்தான் போராடிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் தெரஸ்.

ஓய்வில்லாப் போராளி!

ஷ்யாவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை போட்டி, ஒரு குடும்பத்தைப் பிரித்துவிட்டது! 40 வயது ஆர்சனும் 37 வயது லுட்மிளாவும் தீவிர கால்பந்து ரசிகர்கள். 2002-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பிறகு அடிக்கடி போட்டிகளில் பேசி, பழகி, நட்பாகி, காதலர்களாக மாறி, திருமணமும் செய்துகொண்டனர். 14 ஆண்டுகளாக நிம்மதியான, அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்த வாழ்க்கையை லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர். “எப்போதும் நானும் லுட்மிளாவும் மெஸ்ஸி, ரொனால்டோ குறித்து விளையாட்டாகக் கிண்டல் செய்துகொள்வோம். இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா தோல்வியடைந்த அன்று, மெஸ்ஸி குறித்து மிக மோசமாகப் பேச ஆரம்பித்தார் லுட்மிளா. ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை. நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் கோலை நான் கொண்டாடிக் கொண்டிருந்தேன். மீண்டும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் என்னை வெறுப்பேற்றுவதற்காக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கினார். விளையாட்டு விபரீதமாவதை உணர்ந்து, அவரை எச்சரித்தேன். ஆனால் அதையும் கிண்டல் செய்துவிட்டார். பொறுமை இழந்த நான் ரொனால்டோ குறித்து கிண்டல் செய்தேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சண்டை பெரிதானது. அவரின் நல்ல குணங்களை நினைத்துப் பொறுமையுடன் இருந்தேன். ஆனால் தூங்கி எழுந்தபோது நடந்த சம்பவங்கள் கோபத்தை வரவழைத்துவிட்டன. ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டேன்” என்கிறார் ஆர்சன்.

விளையாட்டு வினையாகிவிட்டதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x