Published : 07 Jul 2018 10:00 PM
Last Updated : 07 Jul 2018 10:00 PM

இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எனும் கட்சியை, ரோகண விஜயவீர 14.06.1965 அன்று நிறுவினார். ரோகண விஜயவீரவால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் ஜே.வி.பி.யில் இணைந்தனர்.

ஜே.வி.பி. இலங்கையில் ரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு தேவையான ஆயத்தங்களையும் செய்து வந்தது. இதுகுறித்து அன்றைய சிறிமாவோ பண்டாரநாயகா அரசுக்கு தெரிய வந்ததால் 1971-ம் ஆண்டு மார்ச்சில் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரோகண விஜயவீர சிறைக்குள் இருக்கும்பொழுதே, இலங்கை அரசுக்கு எதிராக ஜே.வி.பி.யினர் நாட்டின் பல பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இலங்கையின் தெற்குப் பகுதியில் சில மாவட்டங்கள் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இலங்கை அரசு சர்வதேச உதவிகளுடன் இந்த கிளர்ச்சியை முறியடித்து ஜே.வி.பி. கட்சி இலங்கையில் தடை செய்யப்பட்டது. பின்னர் வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு ரோகண விஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜே.வி.பி. மீதான தடையையும் நீக்கியது.

பின்னர் ஜே.வி.பி. ஜனநாயக பாதைக்கு திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் போட்டியிட்டது. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் ரோகண விஜயவீர போட்டியிட்டு 2,75,000 வாக்குகளையும் பெற்றார். 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்துக்கு ஜே.வி.பி.யினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இக்கட்சி தடை செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஜே.வி.பி. கட்சியினர் தலைமறைவாக இயங்கத் தொடங்கி 1989-ம் ஆண்டு மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடவே நவம்பர் 12, 1989 அன்று இலங்கை ராணுவத்தினரால் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) நிறுவிய ரோகண விஜயவீரவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் அனுருத்த ஜயசிங்க இயக்கியுள்ள 'கின்னேன் உபன் சீத்தல' எனும் சிங்களத் திரைப்படம் (தி புரோஸன் பயர்-The Frozen Fire) எடுக்கப்பட்டுள்ளது. ரோகண விஜயவீரவின் கதாபாத்திரத்தில் முன்னணி சிங்கள திரைப்பட நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்துக்காக இலங்கை திரைப்படம் ஒன்று ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல்முறை. இந்த படம் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் திரையிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x