Published : 07 Jul 2018 08:42 AM
Last Updated : 07 Jul 2018 08:42 AM

உலக மசாலா: வேட்டைக்காரர்களை வேட்டையாடிய சிங்கங்கள்!

தெ

ன்னாப்பிரிக்காவில் உள்ள சிபுயா கேம் ரிசர்வ் பகுதியில் சட்ட விரோதமான காண்டாமிருக வேட்டைக்காரர்களை, வேட்டையாடியிருக்கின்றன சிங்கங்கள். காண்டாமிருகங்களின் விலை மதிப்பு மிக்கக் கொம்புகளுக்காக, அவற்றை வேட்டையாடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் சட்ட விரோத வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தடையையும் மீறி வேட்டை நடந்துகொண்டிருக்கிறது. “இந்தப் பகுதியில் வேட்டையைத் தடுப்பதற்குப் பல விஷயங்களை மேற்கொண்டிருக்கிறோம். எங்களுக்கே தெரியாமல் காண்டாமிருக வேட்டைக்காரர்கள் இங்கே நுழைந்திருக்கிறார்கள். எங்கள் ஊழியர் ஒருவர்தான் மனிதத் தலைகள் இருப்பதாகச் சொன்னார். மூன்று தலைகளும் உடலின் சில பாகங்களும் 3 ஜோடி ஷூக்களும் இருந்ததைப் பார்த்தோம். சற்று தூரத்தில் வேட்டைக்காரர்கள் பயன்படுத்திய சக்தி வாய்ந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் கத்திகளும் இருந்ததைக் கண்டறிந்தோம். எங்களை விட பசியோடு அலைந்த சிங்கங்கள்தான், காண்டாமிருகங்களைக் காப்பாற்றியிருக்கின்றன. மேலும் சிலர் கூட வந்திருக்கலாம். அடர்ந்த கோரைப்புற்கள் வளர்ந்திருக்கும் காடு என்பதால் எங்களால் உள்ளே சென்று தேட முடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் அவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர்களின் பைகளை ஆராய்ந்தபோது காண்டாமிருகங்களுக்காக நீண்ட நாட்கள் இங்கே இருந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இந்தச் சம்பவத்தின் மூலம் எல்லா நேரத்திலும் வேட்டைக்காரர்களால் வெற்றி பெற முடியாது என்பது மற்ற வேட்டைக்காரர்களுக்குப் புரிய வந்திருக்கிறது. உயிரிழந்தவர்கள் யார், எங்கிருந்து வந்திருந்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் தெரியவில்லை” என்கிறார் இந்தப் பூங்காவின் உரிமையாளர் நைக் ஃபாக்ஸ்.

வேட்டைக்காரர்களை வேட்டையாடிய சிங்கங்கள்!

போலந்து நாட்டைச் சேர்ந்த ‘இகாலஜிக்ஸனா’ என்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கு 1,83,000 ரூபாய் அலைபேசி கட்டணம் செலுத்தச் சொல்லி தகவல் வந்தது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெண் கொக்கின் உடலில் சிம் கார்டு, ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, பறவைகளின் இடப்பெயற்சி, செல்லும் பாதை, உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கவனிக்கத் திட்டமிட்டிருந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெண் கொக்கு கருவிகளுடன் பறந்தது. ஓராண்டில் சுமார் 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் அது பறந்து செல்வதைக் கண்காணிக்க வேண்டும் என்பது திட்டம். ஆப்பிரிக்காவிலிருந்து போலந்து திரும்பும் வழியில் சூடானில் கொக்கு தங்கியிருந்தது ஜிபிஎஸ் மூலம் தெரியவந்தது. இரண்டு மாதங்கள் 25 கி.மீ. தூரத்திலேயே கொக்கு பறந்து கொண்டிருப்பதாகக் காட்டியது. திடீரென்று தொடர்பு கிடைக்காமல் போனது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காரணம் புரியாமல் தவித்தனர். தற்போது கொக்கு உடலில் வைக்கப்பட்டிருந்த சிம் கார்டுக்கு 1,83,000 ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்லி பில் வந்து சேர்ந்திருக்கிறது. பிறகுதான் சூடானில் பறவையின் உடலில் இருந்து சிம் கார்டை யாரோ திருடி, பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இப்படி எல்லாம் மனிதர்கள் இருந்தால், எப்படி ஆராய்ச்சி செய்வது என்று மிகவும் வருந்தி, பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருக்கிறது இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு.

அதானே… இப்படிச் செய்தால் என்ன செய்வது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x