Published : 27 Jun 2018 08:20 AM
Last Updated : 27 Jun 2018 08:20 AM

உலக மசாலா: இயற்கையை நேசிக்கும் இன்னொரு டெர்சு உஸாலா!

ப்பானைச் சேர்ந்த 82 வயது மசாஃபூமி நாகசாகி, 29 ஆண்டுகளாக மனிதர்கள் வசிக்காத தீவில் வாழ்ந்து வந்தார். முதுமையின் காரணமாக அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள். “நான் ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்தில் வேலை செய்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நகர வாழ்க்கை பிடிக்காமல் போய்விட்டது. அதிலிருந்து தப்பி, சோட்டோபனாரி தீவுக்கு வந்து சேர்ந்தேன். மனிதர்கள் வசிக்காத தீவு அது. மீனவர்களே எப்போதாவதுதான் அந்தத் தீவில் இறங்குவார்கள். நான் வந்த ஒரே வருஷத்தில் பெரும் சூறாவளி வீசியது. அதில் என்னுடைய உடைகள் அத்தனையும் காணாமல் போய்விட்டன. அதிலிருந்து உடைகள் அணிவதை விட்டுவிட்டேன். கொசு, வண்டுகளின் கடியிலிருந்து தப்பிப்பதுதான் கடினம். பாம்புகள், சிறு விலங்குகள், பறவைகள் எல்லாம் நிறைய இருக்கின்றன. அவை ஒருபோதும் தேவையின்றி பிற உயிரினங்களைத் தொந்தரவு செய்ததில்லை. ஒருமுறை என்னுடைய கூடாரத்துக்குள் விஷப் பாம்பு இருந்தது. என்னைக் கண்டதும் சீறியது. நான் ஓரமாக உட்கார்ந்துவிட்டேன். உடனே அது வேகமாக ஓடிவிட்டது. ஒருவர் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. அரிசி, எரிபொருள், குடிநீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு எப்போதாவது அருகில் உள்ள தீவுக்குச் செல்வேன். அங்கே என் குடும்பத்தினர் பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். மனிதர்களே இல்லாவிட்டாலும் அந்தத் தீவு எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.

திடீர் மழை, புயல், சூறாவளி, வெயில் என இயற்கையின் சவாலைச் சமாளித்து உயிர் வாழ்வது அற்புதமான அனுபவம். கடற்கரை முழுவதும் கடல் ஆமைகள் வருவதையும் முட்டையிடுவதையும் குஞ்சு பொரிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தீவில் கடுமையான நோய்கள் வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இயற்கை நம்மைக் காப்பாற்றுகிறதே தவிர, நமக்கு நோய்களைப் பரப்புவதில்லை என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டுகொண்டேன். இயற்கைச் சூழல் என்னை நிறையவே மாற்றிவிட்டது. சமீபகாலமாக மீன்களைப் பிடிப்பதில்லை, விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. அதனால் எனக்கு சக்தி குறைந்துவிட்டது என்பது உண்மைதான். நாகரிக நகர வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடிக்காத இரண்டு விஷயங்கள் பணமும் மதமும்தான். இவை இரண்டும் மக்களை ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் இருக்க விடுவதில்லை. உலகத்தையே அழித்துவிடக் கூடியவை. தீவில் இருந்து 60 கி.மீ. தொலைவில்தான் என்னுடைய குடும்பம் இருந்தது. ஆனால் ஒருநாள் கூட நான் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை. சொர்க்கம் போன்ற அந்தத் தீவிலேயே என்னுடைய உயிர் போக வேண்டும் என்று விரும்பினேன். யாருக்கும் தெரியாமல், யாரையும் துக்கப்பட வைக்காமல் தீவில் வாழும் சக உயிரினங்களைப்போல் என் உயிர் பிரிய வேண்டும். அடுத்த சூறாவளி வந்தால் நான் பிழைப்பது கடினம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என் விருப்பத்துக்கு மாறாக அரசாங்க அதிகாரிகள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். இதில் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை” என்கிறார் மசாஃபூமி நாகசாகி.

இயற்கையை நேசிக்கும் இன்னொரு டெர்சு உஸாலா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x