Published : 23 Jun 2018 08:16 AM
Last Updated : 23 Jun 2018 08:16 AM

உலக மசாலா: இப்படியும் ஒரு மகனா!

மெரிக்காவின் சக்தி வாய்ந்த மூன்று நிறுவனங்கள் இணைந்து ‘நல வாழ்வு’ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றன. வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷயர் ஹாத்வே, ஜெஃப் பேஜோஸின் அமேசான், ஜாமி டைமனின் ஜேபி மோர்கன் சேஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து ஆரம்பிக்கும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் அதுல் காவண்டே. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 52 வயது அதுல் காவண்டே, அறுவை சிகிச்சை நிபுணர், பேராசிரியர், எழுத்தாளர், மக்கள் நல வாழ்வு மீது அதிக அக்கறை கொண்டவர். முதல்முறையாக மிகப் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பணிபுரியப் போகிறார். ஆனாலும் தான் இதுவரை செய்துவந்த பணிகளில் இருந்து விலகப் போவதில்லை என்கிறார். அமெரிக்க நிறுவனங்கள் தொழிலாளர்களின் மருத்துவக் காப்பீட்டுக்காகச் செலவிடும் தொகையால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகச் சொல்லி வருகின்றன. நிறுவனங்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து ‘நல வாழ்வு’ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றன. இது லாப நோக்கம் இல்லாத நிறுவனமாகச் செயல்படும் என்கிறார்கள்.

அதுல் காவண்டே கூறியபோது, “நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுவதும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். மக்களின் மருத்துவ செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அந்த லட்சிய பாதையில் தொடர்ந்து பயணம் செய்வேன்” என்றார்.

வாழ்த்துகள் டாக்டர்!

ங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது மாத்யூ கெர்லே, தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்த குற்றத்துக்காக 32 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். சிறையில் இருந்து வந்த பிறகும் அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. “ஒரு பெற்றோராக எங்கள் மகனுக்குப் பணம் கொடுத்து உதவ நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அளவுக்கு அதிகமாகப் பணம் கேட்கும்போது எங்களால் என்ன செய்ய முடியும்? ஓராயிரம் தடவை பணம் கேட்டாலும் ஓராயிரம் பொய்யான காரணங்களை அவனால் சொல்ல முடிகிறது. இன்டர்வியூ போவதற்கு ஷேவ் செய்யப் பணம் வேண்டும் என்பான். பணம் கொடுத்தால் ஷேவிங் பிளேடு உடைந்துவிட்டது வேறு வாங்க வேண்டும் என்பான். கொடுக்காவிட்டால் தாடியுடன் சென்றதால் வேலை கிடைக்கவில்லை என்பான். எந்த வேலைக்கும் செல்ல அவன் தயாராக இல்லை. எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் புகார் கொடுத்தோம். சிறை தண்டனையாவது அவன் மனதை மாற்றும் என்று நினைத்தோம். ஆனால் அவன் சிறிதும் மாறவில்லை. சென்ற மாதத்தில் ஒருநாள், 24 மணி நேரத்தில் 30 தடவை எங்களை அழைத்தான். பணம் வேண்டும் என்பதைத் தவிர அவனிடம் வேறு விஷயம் இல்லை. நள்ளிரவு என்று கூட அவன் எங்களுக்குக் கருணை காட்டவில்லை. இது தவிர குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது. வேறு வழியின்றி மீண்டும் புகார் கொடுத்தோம். விசாரித்த அதிகாரிகள், “பெற்றோரைத் துன்புறுத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் அவன் எங்களைத் தொடர்புகொள்ளக் கூடாது, வீட்டுக்கு அருகில் கூட வரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றனர். எந்தப் பெற்றோரும் செய்ய விரும்பாத செயலை நாங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு எங்களைத் தள்ளிவிட்டான்” என்கிறார்கள் கெர்லேயின் பெற்றோர்.

இப்படியும் ஒரு மகனா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x