Published : 21 Jun 2018 10:07 AM
Last Updated : 21 Jun 2018 10:07 AM

உலக மசாலா: காணாமல் போன 100 வயது ஆமை

ங்கிலாந்தைச் சேர்ந்த 86 வயது டெர்ரி பெல்ப்ஸ், காணாமல் போன தன்னுடைய 100 வயது ஆமையைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு விளம்பரம் கொடுத்திருந்தார். “எனக்கும் என் மனைவிக்கும் ஒரே துணை இந்த ஆமைதான். 100 வயதான ஆமை, எங்களிடம் 30 ஆண்டுகளாக இருக்கிறது. தினமும் பின்பக்க கதவை நாங்கள் திறப்பதற்காகக் காத்திருக்கும். சென்ற வாரம் கதவைத் திறந்தபோது ஆமையைக் காணவில்லை. இதுவரை வீட்டைவிட்டு அது வெளியே சென்றதில்லை. பல இடங்களில் தேடினோம். கிடைக்காததால் விளம்பரம் கொடுத்தோம். எங்களின் தூக்கம் தொலைந்தது. ஆமைக்கு உணவு கொடுக்க வரும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் வருத்தமடைந்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகு, ஒரு மைல் தொலைவில் ஆமையைக் கண்டெடுத்ததாகச் சொல்லி, நல்ல மனிதர் ஒருவர் கொடுத்துவிட்டுப் போனார்” என்கிறார் பெல்ப்ஸ்.

ஊர் சுற்றிப் பார்க்கப் போயிருக்குமோ!

சீ

னாவின் செங்குடு நகரில் ஒரு மாதத்துக்கு முன்பு ஜியாமெனர் என்ற உணவகம் தொடங்கப்பட்டது. உணவகத்தைப் பிரபலப்படுத்த ஒரு மாதத்துக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 வாரங்களிலேயே உணவகம் மூடும் நிலைக்கு வந்துவிட்டது. “நானும் நண்பரும் சேர்ந்துதான் உணவகத்தை தொடங்கினோம். ரூ.1,200 கொடுத்து எங்களிடம் ஒரு அட்டையை வாங்க வேண்டும். காலை முதல் இரவு வரை பஃபே உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலையில் உணவகத்தைத் திறப்பதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர். ஒரு நாளைக்கு சுமார் 500 வாடிக்கையாளர்கள் உணவகத்துக்கு வந்தனர். 2, 3 மணி நேரம் மட்டுமே எங்களால் தூங்க முடிந்தது. ஊழியர்களை ஷிஃப்ட் முறையில் பணிக்கு அமர்த்தினோம். சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்கள் உணவகத்தில் சாப்பிட ஆரம்பித்தனர். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக நினைத்தோம். பிறகுதான் அந்தத் தவறை அறிந்தோம். நாங்கள் கொடுத்த அட்டையில் வாடிக்கையாளரின் படமோ வேறு அடையாளமோ கேட்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் 3 வேளை சாப்பிட்டதோடு, தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அட்டையைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டனர். அட்டை இருப்பவர்களை அனுமதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால் அளவுக்கு அதிகமாக செலவானது. கணிசமான வாடிக்கையாளர்கள் நேர்மையாக இருந்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஏமாற்றியவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருந்தது. 11 நாட்களில் ரூ.55 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தாக்குப் பிடிக்க முடியாமல் இரண்டே வாரங்களில் உணவகத்தை மூடிவிட்டோம். மக்களின் நேர்மையை நம்பி இந்தத் திட்டத்தை தொடங்கினோம். ஆனால் மக்கள் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை அறிந்துகொண்டோம். எதிர்காலத்தில் இன்னும் கவனமாக இருப்போம்” என்கிறார் சூ ஸி.

நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x