Published : 14 Jun 2018 08:08 AM
Last Updated : 14 Jun 2018 08:08 AM

அதிபர்கள் ட்ரம்ப் - கிம் சந்திப்பு நமக்கானது அல்ல

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே, அபூர்வமான சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. “கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்து பதிக்க இருக்கிறோம்; உலகம், பெரியதொரு மாற்றத்தைக் காணப் போகிறது” என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த சந்திப்பால் கொரிய தீபகற்பத்தில் இனி அமைதி நிலவும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்க - வட கொரிய உடன்படிக்கையை வரவேற்றுள்ளன.

உண்மையில் இந்த சந்திப்பு மகிழ்ச்சி தரக் கூடியதுதானா? ஆம் எனில், யாருக்கு? அணு ஆயுதம் தவிர்த்து வேறென்ன பேசப்பட்டது? அனேகமாக எதுவும் இல்லை. இதுவரையில் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவைக் காப்பாற்றி, பாதுகாத்து வந்தது அமெரிக்கா.

ஒரே நாளில் ஒரே சந்திப்பில் மாறி விட்டது; வடகொரியாவும் திருந்தி விட்டது. ஆகவே, தென்கொரியாவுடன் இணைந்து போர் ஒத்திகையில் இனி ஈடுபடப் போவதில்லையாம். இதற்கும் மேல் “மிகுந்த செலவு பிடிக்கிறது. எதற்கு அது? எங்களுக்கும் வடகொரியாவுக்கும்தான் பிரச்சினை இல்லையே” என ட்ரம்ப் சொல்கிறார்

சுவாரஸ்யமான ஒரு தகவல். சீனாவுடனான தனது நெருங்கிய உறவை, வடகொரியா சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. அமெரிக்கா மட்டும், தென்கொரியாவில் தனது நிலையை தன்னிச்சையாக மாற்றிக் கொண்டுவிட்டது. இதுகுறித்து, தென்கொரியாவின் நிலை என்னவென்று அதிகாரபூர்வமாக இதுவரை தெரியவில்லை.

ஆனால் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் ஒப்பந்தத்தைத் தென்கொரியா, பொத்தாம் பொதுவாக வரவேற்றுள்ளது. ‘இனி எல்லாம் சுகமே’ என்று மகிழ்ச்சி கொள்ள முடியுமா? சீனாவும் ரஷ்யாவும் உடன்படாமல், ஆசியாவில் எங்கும் நீடித்த அமைதி உருவாக சாத்தியமே இல்லை.

இவ்விரு வல்லரசுகளுக்கும், அமெரிக்கா - வடகொரியா இடையிலான திடீர் நட்பு, இனிப்பான செய்தியாக இருக்கவே முடியாது. மண்டல அமைதிக்கு, அப்பகுதி நாடுகளுக்கு இடையே நிலவும், அரசியல் அதிகார சமநிலைதான் அடிப்படை. இந்தச் சமநிலை, வெளியில் இருந்து வருகிற வல்லரசால் மேலும் பாதிக்கப்படவே செய்யும்.

சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையே சீரான நல்லுறவு ஏற்பட்டாலே, ஆசிய மண்டலம் அமைதிப் பிரதேசமாக மாற முடியும். அணு ஆயுத ஒழிப்பு மட்டுமே, பதற்றத்தைத் தணித்து விடுமா? இதுவும் ஒரு வகையில் வல்லரசுகள் ஆடும் மோசடி விளையாட்டுதான்.

அணு ஆயுதங்களை மட்டுமே ஒழிக்க வேண்டுமாம். மற்றவை எல்லாம்? ஆட்சியாளர்கள் விரும்பும் அளவுக்கு, பெருக்கிக் கொன்டே போகலாம். இதில்தான் அடங்கி இருக்கிறது சூட்சுமம்.

அணு ஆயுதங்கள் பெரும்பாலும் உள் நாட்டுத் தயாரிப்பு. இதிலே வர்த்தக நலன் பெரிதாக இல்லை. அதனால் அது கூடாது. மற்ற கனரக விலை உயர் நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்க வேண்டும். இல்லையேல் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து. எப்படி இருக்கிறது சங்கதி? ஆயுத உடன்படிக்கைகள் இல்லாத, இரு நாட்டு ஒப்பந்தங்கள் ஏதேனும் காண முடிகிறதா?

இரண்டு தலைவர்கள் பேசிக் கொண்டாலே, போர்க்கப்பல்கள் தொடங்கி, ராக்கெட் ஏவுகணைகள் வரை, விதவிதமாய் எத்தனை ஆயுதங்களை எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள்? வடகொரியா விவகாரத்திலும் இதுதான் நடக்க இருக்கிறது. அணு ஆயுதங்களைக் கைவிட்டு, வேறு நவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்க இருக்கிறது.

வர்த்தகம் நோக்கம் இல்லாமல் அமெரிக்கா எந்தச் செயலையும் செய்ததாய் சரித்திரமே இல்லை. அமெரிக்கா - வடகொரியா ஒப்பந்த நகல், சம்பந்தப்பட்ட அரசுகளால் முறைப்படி இன்னமும் வெளியிடப்படவில்லை. (வெளி வராமலும் போகலாம்) ஆனால், வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராமல், வாழ்நாள் முழுக்க அவரே அதிபராக நீடிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொண்டு இருப்பதாக, அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும் என்பதை அந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் வேறொரு நாட்டு அதிபர் பாதுகாப்பு தர முன் வருகிறார். என்ன சொல்வது? போர் பதற்றத்தைத் தணிப்பது, போருக்கான காரணங்களைக் களைவது என்றெல்லாம் யாரும் பெரிதாக மெனக்கெடவில்லை. ‘உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன்... எனக்கு வேண்டியதை நீ கொடு...’ என்ற ரீதியில் இருவர் செய்து கொண்டுள்ள அப்பட்டமான வர்த்தக ஒப்பந்தம் இது.

இருவருக்கும் லாபம் விளைகிற வரையில், இந்த ஏற்பாடு நீடிக்கும். சீரழிந்து கிடக்கும் வடகொரிய பொருளாதாரத்தை சரிப்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்று கிம் நினைக்கவில்லை. ஒட்டுமொத்த ஆயுதப் பெருக்கத்தைக் குறைத்து, வளரும் சிறிய நாடுகளின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்துவோம் என்று ட்ரம்ப்பும் யோசித்துப் பார்க்கவில்லை.

அதிபர்களின் நலனுக்காக அதிபர்களிடையே ஏற்பட்டுள்ள வணிக லாப நட்டக் கணக்கில், சாமானியர்களை எட்டுவதற்கு, மக்கள் எதிர்பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. சர்வதேச அரசியல் ஒரு சில தலைவர்களின் நலன் சார்ந்ததாக, தனி நபர் விளையாட்டாக மாறி விட்டது. இது மனித குலத்துக்கு நல்லதல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x