Published : 29 May 2018 06:50 AM
Last Updated : 29 May 2018 06:50 AM

உலக மசாலா: விஷ மனிதர்

பி

லிப்பைன்ஸைச் சேர்ந்த 31 வயது ஜோய் குய்லிலன், ‘விஷ மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். விஷப் பாம்புகளை சர்வ சாதாரணமாகப் பிடிக்கிறார், அவற்றை முறையாகக் கையாள்கிறார், பாம்புகளைப் பற்றி அத்தனை விஷயங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். பாம்புகளின் விஷக் கடிகளில் இருந்து தப்பிப்பதற்காக 3 வாரங்களுக்கு ஒருமுறை சிறிது விஷத்தை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறார். 14 வயதிலிருந்து நாகப் பாம்புகளுடன் பழக ஆரம்பித்தார். அப்போது பாம்புகளை எப்படிக் கையாள்வது என்று அவருக்குத் தெரியாது. ஒருநாள் பாம்பு கடித்துவிட்டது. மருத்துவமனைக்குச் செல்லாமல், கடித்த இடத்திலிருந்து ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, ஓய்வெடுத்தார். பொதுவாக விஷப் பாம்புகள் கடித்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், நினைவிழப்பார்கள், பிறகு மரணமடைவார்கள். ஆனால் ஜோய் தூங்கிவிட்டு, இயல்பாக எழுந்தார். அந்த நிகழ்விலிருந்து தனக்கு விஷத்தைத் தாங்கக் கூடிய சக்தி இருப்பதாக நினைக்க ஆரம்பித்தார். பாம்பு விஷத்தை அடிக்கடி உடலில் செலுத்தி, தன்னுடைய உடலை பாம்புக் கடியை எதிர்கொள்ளும் அளவுக்குத் தயார் செய்து வைத்துவிட்டார். இதுவரை நூற்றுக்கணக்கான பாம்புக்கடிகளை இவரது உடல் சந்தித்திருக்கிறது. இவற்றில் 5 முறை மட்டுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

“மரணத்துடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரிகிறது. ஆனாலும் பாம்புகளை விட்டு விலக நான் நினைத்ததே இல்லை. நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் என்னைக் கடித்திருக்கின்றன. அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்குதான் என் உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் மருத்துவமனை சென்று, சிகிச்சைப் பெற்றுத் திரும்பினேன். மருத்துவர்களே என்னைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சாதாரண மனிதர்கள் இந்தப் பாம்புக்கடிகளுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றார்கள். அதனால்தான் என்னை எல்லோரும் ‘விஷ மனிதன்’ என்று அழைக்கிறார்கள். விஷத்தைச் செலுத்திக்கொள்வதால் பாம்புக் கடியிலிருந்து தப்பிப்பதோடு, என் உடல் உறுதியடையவும் செய்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்னைப் பரிசோதித்தனர். அதில் சக்தி வாய்ந்த இரண்டு பாம்புகள் என்னைக் கடித்தன. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, நான் இயல்பாக இருப்பதாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகே நம்பாதவர்கள் கூட நம்ப ஆரம்பித்தனர். என்னுடைய ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள், நாகப் பாம்பின் விஷத்தை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புப் பொருள் இவருக்கு இருக்கிறது என்று சான்றளித்திருக்கிறார்கள். இயற்கையைப் பேணுவதில் பாம்புகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பாம்புகளை நேசிக்கிறேன். பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுத்து வருவதை என் கடமையாக நினைக்கிறேன்” என்கிறார் ஜோய்.

செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் இடத்தில் முதலில் வேலை செய்துவந்த ஜோய், பிறகு பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். இங்கே பாம்புகளைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த டிம் ப்ரிட்ஜ் இவருக்கு முன்பே ‘விஷ மனிதராக’ வாழ்ந்திருக்கிறார்.

விஷத்தை விஷத்தால் எதிர்கொள்ளும் விநோத மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x