Published : 25 May 2018 08:08 AM
Last Updated : 25 May 2018 08:08 AM

உலக மசாலா: 71 வயதில் கர்ப்பமான முதல் பெண்

மெ

க்சிகோவின் மஸாட்லான் நகரில் வசிக்கிறார் 71 வயது மரியா டி லா லஸ். இவர் தற்போது 6 மாதக் கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் அழகான பெண் குழந்தைக்குத் தாய் ஆகிவிட்டால், உலகிலேயே வயதான அம்மா என்ற பட்டத்தையும் பெற்றுவிடுவேன் என்கிறார். “திடீரென்று உடல் சோர்வடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தேன். நான் ஒன்பதாவது முறையாக அம்மாவாகப் போகிறேன் என்று மருத்துவர்கள் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. இந்த 6 மாதங்களில் 10 தடவை ஸ்கேன் செய்து, குழந்தை இருப்பதை உறுதி செய்திருக்கிறேன். மருத்துவர்கள் பெண் குழந்தை என்று சொல்லியிருக்கிறார்கள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் என்னுடைய மற்ற குழந்தைகள் தங்களுக்குப் பிறக்கப் போகும் தங்கையை வரவேற்கத் தயாராக இல்லை. வயதான காலத்தில் பிரசவம் வேண்டாம் என்று கலைத்துவிடச் சொன்னார்கள். அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் குழந்தைகள் சொல்வதுதான் சரி என்றார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை” என்கிறார் மரியா. மெக்சிகோ முழுவதும் பிரபலமாகிவிட்ட மரியா, பொய் சொல்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருவேளை குழந்தை பிறந்துவிட்டால், 71 வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெயரைப் பெறுவார் மரியா.

சாதனை படைப்பாரா இந்த மரியா?

தெ

ன்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகெர் தேசியப் பூங்காவில் வசித்தது ஸ்கைபெட் ஸ்கார் என்ற சிங்கம். முதுமை காரணமாகத் தன்னுடைய குடும்பத்துக்கு உணவும் பாதுகாப்பும் வழங்க முடியாத சூழலில், குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்டது. ஒரு காலத்தில் இந்தப் பூங்காவையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்கம், பசிக்கு உணவின்றி எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது. சிங்கத்தின் இறுதி நிமிடங்களைப் படம் பிடித்தவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த லார்ரி அந்தோனி பான்னெல். “நான் இங்கே வந்தபோதே சிங்கம் மிக மோசமான நிலையில் இருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு எழுந்து நிற்கவே முடியவில்லை. சில அடிகள் நடப்பதும் விழுவதுமாக இருந்தது. ஒரு யானை சிங்கத்தை விரட்ட, பயந்து நகர்ந்த காட்சி கண்ணீரை வரவழைத்துவிட்டது. சிங்கத்தின் கடைசி நாள் மிகவும் கஷ்டமாக இருந்தது. நானும் நண்பரும் அந்தக் காட்சியைக் காண சகிக்காமல், வேறு இடத்துக்குச் சென்றுவிட்டோம். சில மணி நேரம் கழித்து வந்தபோது, சிங்கம் நிலத்தில் சாய்ந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு அடங்கியது. நான் சிங்கத்தின் வாழ்வையும் மரணத்தையும் நேரில் பார்த்துவிட்டேன். பூனைக் குடும்பங்களில் சிங்கமே குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறது. பெண் சிங்கம் வேட்டையாடுவது ஆண் சிங்கம் குடும்பத்தைப் பாதுகாப்பது என்று வேலைகளைப் பிரித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன. இரண்டு வயதிலேயே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் ஆண் சிங்கங்கள் தங்கள் குடும்பத்துக்காக எதிரிகளுடன் சண்டையிடுகின்றன. சவால்களை எதிர்கொள்கின்றன. தங்களால் அந்தப் பொறுப்பைச் சரிவர செய்ய முடியாதபோது குடும்பத்தினரால் வெளியேற்றப்படுகின்றன அல்லது தாங்களே வெளியேறிவிடுகின்றன” என்கிறார் லார்ரி அந்தோனி.

பட்டினியால் மடிந்த பரிதாப சிங்கம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x