Published : 20 May 2018 08:56 AM
Last Updated : 20 May 2018 08:56 AM

உலக மசாலா: புதையலை கொடுத்த பெரிய மனிதர்கள்

மெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஸ்டேடன் தீவில் வசிக்கும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் பின்புறத்திலிருந்து விலை மதிப்பு மிக்க புதையலை எடுத்திருக்கிறார்கள். இதில் 35.35 லட்சம் ரூபாயும் வைரம், தங்கம், பச்சை மாணிக்கம் போன்ற விலை மதிப்பு மிக்க கற்களும் இருந்தன. மாத்யூவும் மரியா கொலொன்னா இமானுவேலும் வீட்டின் பின்புறத்திலுள்ள மரங்களை வெட்டச் சொன்னார்கள். அப்போது ஓர் உலோகப் பெட்டி மண்ணுக்குள் இருந்து வெளிவந்தது. “இந்தப் பெட்டிக்குள் ஏதாவது மின் உபயோக பொருட்களிருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மிகவும் பாதுகாப்பான பெட்டகமாக இருந்ததைப் பார்த்தபோது, ஏதோ மதிப்பு மிக்க பொருள் இருக்கும் என்று தோன்றியது. பெட்டியைத் திறந்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டோம். ஏராளமான டாலர் கரன்சிகளும் நகைகளும் விலை மதிப்பு மிக்க கற்களும் இருந்தன. அதில் இருந்த துண்டு காகிதத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் முகவரி இருந்தது. அவரிடம் ஏதாவது திருடு போய் இருக்கிறதா என்று விசாரித்தோம். 2011-ம் ஆண்டு திருடு போயிருப்பதாகச் சொன்னார். எதற்காக திருடர்கள் அங்கே திருடி, இங்கே புதைத்தார்கள் என்பதும் இதுவரை ஏன் எடுக்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் புதையலை ஒப்படைத்துவிட்டோம். எல்லோரும் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். எங்களுடையது இல்லை என்பதால் கொடுத்துவிட்டோம்” என்கிறார் மாத்யூ.

புதையலை தூக்கிக் கொடுத்த பெரிய மனிதர்கள் வாழ்க!

ஸ்

வீடனைச் சேர்ந்த 30 வயது ஜோஹன்னா சான்ட்ஸ்ட்ரம், தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பெயர்களை டாட்டூவாக போட்டுக்கொள்ள விரும்பினார். டாட்டூ கலைஞரிடம் பெயர்களைச் சொல்லிவிட்டு அமர்ந்தார். டாட்டூவைக் கண்ணாடியில் பார்த்து திருப்தியாக வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் கெவின் என்ற பெயர் கெல்வின் என்று மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். “என் கணவர்தான் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டினார். டாட்டூ கலைஞர் பெயர்களை எழுதித் தரும்படிக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன். சரியாகக் காதில் விழவில்லை என்றால் இன்னொரு முறை அவர் கேட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி ஒரு புதிய பெயரை வரைந்து கொடுத்தால் என்ன செய்வது? டாட்டூ போட்ட உற்சாகம் கோபமும் எரிச்சலுமாக மாறிவிட்டது. உடனே டாட்டூ கலைஞருக்கு தகவல் சொன்னேன். அவர் சிரித்தவுடன் கோபம் இன்னும் அதிகமானது. இந்த டாட்டூவை மாற்றவோ அழிக்கவோ முடியாது. லேசர் மூலம் அகற்றிக்கொள்ளுங்கள். டாட்டூவுக்கான கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன் என்றார். டாட்டூவை லேசர் மூலம் நீக்குவதற்கான முயற்சியில் இறங்கினோம். அது அவ்வளவு எளிதாக இல்லை. வேறு வழியின்றி குழந்தையின் பெயரைக் கெல்வின் என்றே மாற்றிவிடும் முடிவுக்கு வந்துவிட்டோம். எங்கள் குடும்பத்தில் கெல்வின் என்ற பெயரில் யாரும் இல்லை. தனித்துவமான பெயருடன் எங்கள் மகன் இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டோம்” என்கிறார் ஜோஹன்னா.

பெயரையே மாற்றிவிட்டதே இந்த டாட்டூ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x