Last Updated : 12 May, 2018 07:48 PM

 

Published : 12 May 2018 07:48 PM
Last Updated : 12 May 2018 07:48 PM

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப்

 

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2008-ம் ஆண்டு , நவம்பர் 26-ம் தேதி மும்பையில் கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் ரயில் நிலையம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் என இந்தியா குற்றம் சாட்டியது. இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டியும் பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது.

ஆனால், அந்தத் தீவிரவாத குழுக்களின் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஷ் ஷெரீப் ’டான்’ நாளேட்டுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

''பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. (தீவிரவாதக் குழுக்கள் பெயரை குறிப்பிடவில்லை) அரசில் எந்தவிதத்திலும் பங்கு பெறாமல், ஆனால், அரசில் மிகுந்த அதிகாரம் மிக்க குழுக்களாக தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தத் தீவிரவாதிகளை எல்லை தாண்டிச் சென்று மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்கலாம். இதை விளக்கமுடியுமா. இதுதான் பாகிஸ்தான் கொள்கையா?

இப்படிப்பட்ட நிகழ்வுக்குப்பின், நாம் வழக்கை இன்னும் முடிக்காமல் முடிக்காமல் வைத்திருப்பது ஏன். இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் கேட்கிறார்கள். இதற்கு பதில்கூற முடியாமல் பாகிஸ்தான் தவிக்கிறது.

ஒரு நாட்டுக்குள் ஒரு அரசுதான் இருக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று அரசுகள் ஒன்றாகச் செயல்பட முடியாது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். ஒரு அரசியலமைப்பு சட்டம் ஒரு அரசுதான் இயங்க வேண்டும்.''

இவ்வாறு நவாஷ் ஷெரீப் தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயத், மவுலானா மசூத் அசார் ஆகியோர் இதுவரை தண்டிக்கப்படவில்லை. வழக்கு மட்டும் ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 10 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளில் 9 பேரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார், அவர் மீதான வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததால் தூக்கிலிடப்பட்டார்.

இதையும் படிக்க மறந்துடாதீங்க...

ஜூன் 12-ல் கிம்முடன் சந்திப்பு: ட்விட்டரில் உறுதி செய்த ட்ரம்ப்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x