Published : 29 Apr 2018 08:44 AM
Last Updated : 29 Apr 2018 08:44 AM

உலக மசாலா: நம்பிக்கை டானிக்!

பா

ர்வையற்வர்கள் இயல் பான மனிதர்களைப் போல் வாழ்க் கை நடத்த முடியும் என்று பலரும் நிரூபித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அர்ஜென்டினாவில் பிறந்து, ஸ்பெயினில் வசிக்கும் 20 வயது மார்சிலோ லுசார்டி. இரண்டு ஆண்டுகளுக்கு இவரது வலது கண்ணில் வலியும் பார்வை குறைபாடும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்தபோது, மரபணுக் குறைபாடு என்று தெரிந்தது. விரைவில் இடது கண்ணும் பார்க்கும் சக்தியை இழந்துவிடும் என்று மருத்துவர்கள் சொன்னதுபோலவே நடந்துவிட்டது. மீண்டும் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்பும் தற்போது இல்லை. திடீரென்று பார்வை இழந்தவுடன் மார்சிலோ நிலைகுலைந்து போனார். பார்வை இல்லாமல் இனி தன்னால் வாழ முடியாது என்ற மனநிலைக்கு வந்ததால், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது இவரது தோழியின் அப்பா, ஆறுதலாகப் பேசினார். நடந்ததை ஏற்றுக்கொள்ளப் பழக்கினார். பார்வை இல்லாவிட்டாலும் உலகில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

“உடைந்து போன என்னை விரைவிலேயே மீட்டெடுத்தனர் தோழியும் அவரது அப்பாவும். வழக்கம்போல் நண்பர்களுடன் ஸ்கேட் பார்க்குக்குச் சென்றேன். எல்லோரும் விளையாடுவதை சத்தத்தை வைத்து உணர்ந்தேன். அவர்களை உற்சாகப்படுத்தினேன். உடனே நண்பர்கள் என்னைச் சறுக்கு விளையாடில் பங்கேற்கும்படி வற்புறுத்தினார்கள். இப்படித்தான் மீண்டும் விளையாட ஆரம்பித்தேன். ஆனால் பார்வை இல்லாதவருக்குச் சறுக்கு விளையாட்டு எவ்வளவு கடினம் என்பது அப்போதுதான் தெரிந்தது. சாதாரணமானவர்கள் ஸ்கேட் போர்ட் மீது சரியாக நின்றுவிட்டால் விளையாட ஆரம்பித்துவிடலாம். ஆனால் நான் முதலில் சுற்றுச்சூழலைக் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் பார்வையாளர்களின் கரவொலி, கூச்சல் போன்றவற்றால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். நான் ஒலியை நம்பியே களத்தில் இருக்கிறேன். இதுபோன்ற சூழலில் நண்பர்கள் எனக்கு உதவுகிறார்கள். சறுக்கு விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதில் பல உத்திகளையும் புதுமைகளையும் செய்து வருகிறேன். வேகமாகச் செல்லும்போது ஸ்கேட் போர்டைத் தலைகீழாகச் சுழற்றி மீண்டும் அதில் ஏறிச் செல்கிறேன்.

என்னுடைய விளையாட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் பார்வையோடு இருந்திருந்தால் கூட இப்படித் தனித்துவமாகப் பிரகாசித்திருப்பேனா என்று தெரியாது. பார்வை இழந்ததில் என் திறமை எனக்குத் தெரியவந்திருக்கிறது. ஏதாவது கஷ்டம் வந்தால் அதோடு வாழ்க்கை முடிந்தது என்று யாரும் நினைக்காதீர்கள். இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று இல்லவே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்றவனாக மாறுவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் இன்று அதையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டேன். என்னுடைய சறுக்கு விளையாட்டைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்பதாகச் சொல்கிறார்கள். இது போதும் இந்த வாழ்க்கைக்கு. என் வாழ்நாளுக்குள் என் பிரச்சினைக்கான தீர்வை மருத்துவ உலகம் கண்டுபிடித்துவிடும் என்று நம்புகிறேன். அதுவரைக்கும் பிறருக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்க விரும்புகிறேன். அதுவும் இன்றைய உலகத்துக்கு மிகவும் முக்கியம்” என்கிறார் மார்சிலோ லுசார்டி.

நம்பிக்கை டானிக்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x