Published : 28 Apr 2018 08:17 AM
Last Updated : 28 Apr 2018 08:17 AM

உலக மசாலா: கேள்வி கேட்பது குற்றமா?

சீ

னாவைச் சேர்ந்த இளம் மருத்துவர், 3 மாதச் சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளியே வந்திருக்கிறார். குவாங்ஸோவைச் சேர்ந்த 39 வயது டான் க்வின்டோங், கடந்த டிசம்பர் மாதம் மெய்பியான் என்ற வலைதளத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். ‘ஹாங்மாவோ மருத்துவ ஒயின்’ சீனாவில் மிகவும் பிரபலமானது. இந்த ஒயின் நச்சுத்தன்மை வாய்ந்ததோடு மட்டுமல்லாமல், விளம்பரத்தில் சொல்வதுபோல் கடுமையான இதய நோய் மற்றும் வாத நோய்களைக் குணப்படுத்தவும் செய்யாது என்று கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விவாதங்களைக் கிளப்பியது. உடனே ஹாங்மாவோ நிறுவனம் மருத்துவர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தது.

தங்களுடைய நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதால் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகச் சொன்னது. ஜனவரி 10 அன்று, மருத்துவர் டான் கைது செய்யப்பட்டு, 2,300 கி.மீ. தூரத்தில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவர் அதிர்ந்து போனார். பிறகுதான் அவருக்குக் காரணம் தெரிந்தது. ‘சீன மருத்துவ ஒயின் நச்சுத்தன்மை வாய்ந்தது’ என்ற கட்டுரை வெளியானதால், 2 விநியோகஸ்தர்களும் 7 வாடிக்கையாளர்களும் மருத்துவ ஒயினைத் திருப்பிக் கொடுத்து, பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் மருத்துவரே இப்படிப்பட்ட ஒரு கருத்தைக் கட்டுரையாக வெளியிட்டதில் உள்நோக்கம் இருந்ததாகக் கருதி, நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.

மருத்துவரின் கைது, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. ஹாங்மாவோ ஒயின் மங்கோலியாவின் லியாங்செங் பகுதியில் அதிகமாக விற்பனையாகிறது. இதில் 67 வகை தாவரங்கள், சிறுத்தை யின் எலும்புகள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் மூட்டு வலி, சிறுநீரகப் பாதிப்பு, சோர்வு, ரத்தசோகை, இதய நோய்கள் போன்றவற்றையும் குணமாக்குகிறது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. மருத்துவரின் கட்டுரையால் மக்களிடம் மருத்துவ ஒயின் மீது நம்பிக்கை குறைந்திருக்கிறது. மருந்துக்கடைகள் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று பாட்டில்களை எளிதில் தெரியாதவாறு அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

“பாரம்பரியச் சீன மருத்துவப்படி மருந்துகளைத் தயாரிப்பதாகவும் ஒரே மருந்து பல நோய்களைக் குணமாக்கும் என்று அதீதமாகச் சொல்லும்போதும் ஒரு மருத்துவனாக இயல்பாகவே கேள்வி எழுகிறது. ஒரு கேள்வி கேட்டதற்கு நான் அனுபவித்த தண்டனை போதும். எனக்காக ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் பேசினால் மறுபடியும் தண்டனை கிடைக்கலாம். சிறைத் தண்டனை மிக மோசமான அனுபவத்தைத் தந்திருக்கிறது. ஒரு குற்றவாளி கூட இப்படி நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மருந்து நிறுவனங்கள் நாம் நினைப்பதை விடவும் மிக அதிகமான செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. என்னை ஒரு ஹீரோவாகப் பார்க்க வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்றால்தான் இதற்குத் தீர்வு” என்கிறார் டான் க்வின்டோங்.

கேள்வி கேட்பது குற்றமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x