Published : 27 Apr 2018 08:52 AM
Last Updated : 27 Apr 2018 08:52 AM

உலக மசாலா: லிட்டில் ப்ரூஸ் லீ!

ப்பானைச் சேர்ந்த 8 வயது ரைசியாய் இமாய், தற்காப்பு கலைகளில் மிகச் சிறந்தவராகத் திகழ்கிறார். தற்காப்பு கலைகளின் மகத்தான கலைஞர் ப்ரூஸ் லீயின் மறுபிறவிபோல் இருக்கிறார். தினமும் கடினமான உடற்பயிற்சிகளை விரும்பிச் செய்கிறார். பள்ளிக்கும் செல்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் உலகத்தின் பார்வைக்குத் தெரிய வந்தார் இமாய். 1972-ம் ஆண்டு வெளிவந்த ப்ரூஸ் லீயின் ‘கேம் ஆஃப் டெத்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற நன்சாகூ தற்காப்பு கலையை அப்படியே 4 வயதில் செய்து காட்டினார். உலகமே பிரமித்துப் போனது. தொலைக்காட்சிப் பெட்டியில் ப்ரூஸ் லீயின் திரைப்படம் ஓட, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு திரும்பி நின்று இமாய் அதையே செய்து காட்ட, கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ப்ரூஸ் லீயின் ரசிகர்கள் அவரைப்போல் இன்னொருவர் உருவானது கண்டு ஆச்சரியமடைந்தனர். பாராட்டுகள் குவிந்தன. ஆனால் எந்தப் பாராட்டையும் புகழையும் இமாய் கண்டுகொள்ளவே இல்லை. தன்னுடைய லட்சியத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தினார். இந்த மூன்று ஆண்டுகளில் தன்னுடைய உடலை லிட்டில் ப்ரூஸ் லீயாக மாற்றியிருக்கிறார்!

“ஒரு வயதிலிருந்தே ப்ரூஸ் லீயின் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். நாட்கள் செல்லச் செல்ல அவனது ஆர்வம் அதிகரித்தது. தானாகவே கை கால்களை உதைத்து தற்காப்பு கலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அவனது ஆர்வத்தைப் பார்த்துப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தோம். தினமும் காலை 6 மணிக்குப் பயிற்சி செய்ய ஆரம்பிப்பான். 2.5 மணி நேரம் பயிற்சியை முடித்துவிட்டு, பள்ளிக்குச் செல்வான். பள்ளியிலிருந்து வந்தவுடன் மீண்டும் 2 மணி நேரம் கிக்ஸ், நன்சாகூ போன்றவற்றில் பயிற்சி எடுப்பான். நன்சாகூ கலையில் மாஸ்டராகத் திகழும் இமாய், கேம் ஆஃப் டெத் திரைப்படக் காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டினான்.

அதன்பிறகு நாளுக்கு நாள் இவனது திறமை வளர்ந்துகொண்டே இருக்கிறது. புகழும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இவனை ஃபேஸ்புக்கில் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 33 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இவனைக் குழந்தைகளுக்கான பொருட்களுக்கு மாடலாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வயதுக்கு இவ்வளவு தற்காப்பு கலைகளைச் செய்வதே மிகப் பெரிய விஷயம். சிலர் இன்னும் பயிற்சி கொடுத்தால் நல்லது என்கிறார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இவன் வயதுக்குரிய இயல்பான குழந்தைகளின் விளையாட்டு, படிப்பு போன்றவற்றிலும் இவன் ஈடுபட வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறோம்” என்கிறார் இமாயின் அப்பா.

வழக்கம்போல் ஒரு பக்கம் இமாயின் திறமைகளைக் கண்டு. ‘லிட்டில் ப்ரூஸ் லீ’ என்று பட்டம் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குழந்தையை அவரது பெற்றோர் தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

லிட்டில் ப்ரூஸ் லீக்கு வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x